“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். இவ்வுலகம் மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்துள்ளபோது, நாம் நீரைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? கடல் பெரியதுதான் ஆனால் தாகம் தீர்க்காது. ஆக “நீர்” என்று இங்கு வள்ளுவர் குறிப்பிட்டதை நாம் குடிநீர் என்றே வைத்துக்கொள்ள வேண்டும். கடலில் இருந்துதான் நமக்கு மழையாக மாறிப் பொழிகிறது (Water Cycle) என்று சொன்னாலும் அந்த மழை கடலிலேயே பெய்தால் யாருக்கு என்ன பயன்? அந்த மழையானது ஏரி, குளம், குட்டை, ஆறு போன்ற இடங்களில் பெய்தால்தான் அந்த மழைக்கும் பெருமை, அதை சார்ந்து வாழும் நம்மைப் போன்ற பல ஜீவராசிகளுக்கும் பயன்.

சரி, ஏன் இப்படிச் சுற்றி வளைத்துப்பேசுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? ஒரு முக்கியமான கருத்தைப் பதியவைக்கத்தான். பண்டையகாலம் முதல் இன்று வரை மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் நீரை சார்ந்தே வாழ்கின்றன(ர்). அதனால்தான் பழம்பெரும் கலாச்சாரங்கள் நீரையும், நீரைச் சார்ந்த ஊர்களையுமே மையமாகக்கொண்டு விளங்கின. அப்படிப்பட்ட கலாச்சார பெருமையை தன்னோடு இன்றும் பறைசாற்றி கொண்டிருக்கும் ஒரு நதிதான் காவேரி.

இதில் ஒரு சிறப்பான அம்சத்தைக் கேளுங்கள். வாரிக் கொடுப்பவர்களை நாம் வள்ளல் என்கிறோம். ஆனால் இயற்கையில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுப்பவர்களை நாம் அன்னை, தாய் என்று போற்றி பெண் உருவாகவே வழிபடுகிறோம். இது ஒரு இந்திய கலாச்சாரத்தின் பெருமை. அன்னை பூமி, தமிழ்த்தாய் என்ற பட்டியலில் நதிகளும் அடங்கும். ஏனென்றால் அவைகளும் வாரிக்கொடுக்கின்றன. அதனால்தான் காவிரியைக்கூட நாம் “காவிரித்தாய்” என்கிறோம்.

Image Source: Lotus Arise

கர்நாடகாவில் கொடகு மலைச்சாரலில் புறப்படும் அன்னை காவிரிக்கு அதுதான் பிறந்த இடம். அங்கே அவள் “தலக்காவேரி” (அ) “தலைக்காவேரி” என்று அழைக்கப்படுகிறாள். அங்கே வாழும் மக்களுக்கு அவள் தெய்வமாகவே தோன்றுகிறாள். என் நண்பர் சொல்லி கேட்டிருக்கிறேன், அங்குள்ள மக்கள் தலக்காவேரியில் காலில் செருப்புக்கூட போடாமல்தான் போக வேண்டுமாம்! ஏனென்றால் அவள் புறப்படும் இடம் அத்தனை புனிதமாகக் கருதப்படுகிறது.

புனிதம் என்றவுடனே எனக்கு இன்னொரு நதியான அன்னை கங்கைதான் ஞாபகத்திற்கு வருகிறாள். கங்கையை புனிதத்தின் உருவாகவே பாரத மக்கள் வழிபடுகிறார்கள். இன்று அந்த புனித நீரை நாம் எவ்வளவு அசுத்தம் செய்கிறோம் என்பதை சொல்ல முடியாது! சரி, நாம் விஷயத்துக்கு வருவோம். அந்த கங்கையில் குளித்தால் சகல பாவங்களும் நீங்கும் என்று நம்பிக்கை. வடக்குக்கு கங்கை புனிதநீர். அப்போது தெற்குக்கு? நம் காவிரித்தாய்தான்! அவள் “தக்ஷிணகங்கா” என்றும் அழைக்கப்படுகிறாள். கங்கைக்கு நிகரான புனிதம்.

இதில் ஒரு சுவையான செய்தியை மட்டும் சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கிறேன். இந்துக்களிடம் புனிதநீரில் நீராடுதல் என்ற வழக்கம் உண்டு. ஆனால் அதற்கு ஒரு ஆற்றின் அருகில் அல்லவா வாழவேண்டும்? அதனால் அதை சுலபமாகச்செய்ய ஒரு பாசுரத்தை அவர்கள் வீட்டில் தங்கள் பாத்ரூமில் சொல்லிக் குளிப்பது வழக்கம்.

“கங்கை கங்கையென்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்”
என்று தொடங்கி
“கங்கையில் புனிதமாய காவிரி நடுவுபாட்டு”

என்று சொல்லிமுடித்துக் குளிப்பார்கள். ஆக, கங்கையைக் காட்டிலும் காவிரிக்கு புனிதம் அதிகம் என்பதே பண்டைய தமிழர்களின் நம்பிக்கை. இந்த பாடல் வரிகளைக் கேளுங்கள்.

நடந்தாய் வாழி காவேரி!
பெயர் காரணம் மேலும் தொடரும்……..


நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முயற்சி செய்து பாருங்கள்

  1. நீர் சுழற்சி (water cycle) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
  2. தலக்காவிரியில் தொடங்கும் அன்னை காவேரியின் பாதையை பாருங்கள். அவள் எங்கே தமிழ்நாட்டின் உள்ளே வருகிறாள் என்று பாருங்கள்.
  3. மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பாசுரங்களை யார் இயற்றினார்கள் என்று கண்டு பிடியுங்கள்

பின்குறிப்பு: படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்

முரளி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். கேலக்ஸி மாண்டிசோரி அகாடமியில் தொடக்க இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் புவியியலாளரும், புவியியல் மற்றும் பிற சுவாரசியமான விஷயங்களில் கவனம் செலுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Murali Krishnan is from Chennai and works for Galaxy Montessori Academy as an Elementary Director. He is also a Geographer and passionate about writing articles in Tamil focusing on Geography and other interesting subject areas.

(Featured Image source: Britannica.com)

Categories:

3 Responses

  1. அங்கே செல்ல ஆவலாய் அலைப்பாயுது மனமே! அருமையான தொகுப்பு. பாராட்டுகள் !!

Share your thoughts

%d bloggers like this: