இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா. இப்படி சொல்லும்போது மனதில்தான் எத்தனை இனிமை! எவ்வளவு நிறைவு! நம் தினசரி வாழ்க்கையில் இயற்கையோடு தொடர்பில்லாத எந்த ஒரு விஷயமும் இருக்கவே முடியாது. நாம் சாப்பிடும் உணவு முதல் குடிக்கும் தண்ணீர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
தண்ணீர் என்று சொல்லும்பொது எனக்கு நதிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. நதிக்கு இன்னொரு பெயர் ஆறு.
“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்பார்கள். நல்லவேளையாக நம் ஊர் அழகுதான்! அட, நம் ஊரை சுற்றிதான் பல ஆறுகள் ஒடுகின்றனவை? அதனால்தான் அழுகு என்றேன்.
ஒவ்வொரு கவிஞனும் தன்னுடைய படைப்புகளில் ஒரு ஆற்றின் பெயரை கண்டிப்பாக குறிப்பிட்டு இருப்பார். ஏனென்றால் ஆற்றைச்சுற்றித்தான் நம் வாழ்க்கை ஓடுகிறது. ஓரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்வதை யோசித்து பாருங்களேன்! உங்களுக்கே புரியும்.
“நீங்கள் பார்க்கும் இடம் எங்கும் மரமோ செடியோ இல்லை. பறவைகளோ, பூச்சிகளோ, விலங்குகளோ இல்லை. நாம் உண்ணும் உணவு லேபில் (lab) தயாரிக்கப்படுகிறது. பகலில் ஒரே வெயில். மழைக்குக்கூட ஒதுங்க இடம் இல்லை. குடிக்க தண்ணீர் கூட லேபில்தான் (lab) தயாரிக்கப்படுகிறது.”
எப்படி இருக்கும் இப்படி ஒரு வாழ்க்கை! இப்பொழுது புரிகிறதா ஆற்றின் பெருமையும் முக்கியத்துவமும்?
மனிதர்கள் பண்டையகாலம் தொடங்கி இன்று வரை நீர்நிலைகளை தேடி அதனருகேதான் வாழ்ந்து வருகிறார்கள். மனிதர்களுக்கு மட்டும் அல்ல நான் மேலே சொன்ன அத்தனைக்கும் நீரே ஆதாரம். அப்படிப்பட்ட ஒரு நீர்நிலையான காவிரி ஆற்றைப்பற்றிதான் நாம் இன்னும் ஒரு சில நாட்களுக்கு இங்கே பேசப் போகிறோம்.
“எங்களுக்கு காவிரி பற்றி நிறைய தெரியும்” என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. பின் எதைப்பற்றி பேசப்போகிறோம் என்று கேட்கிறீர்களா?
நான் சொன்னதைப்போல் பல கவிஞர்கள் இந்த அழகிய நதிப்பற்றி என்ன பாடியிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் ஒரு சிறு முயற்சிதான் இந்தக்கட்டுரைத்தொடர். வாருங்கள் காவிரியோடு சேர்ந்து நாமும் பயணிப்போம்.
நடந்தாய் வாழி காவேரி!
பின்குறிப்பு: படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்
முரளி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். கேலக்ஸி மாண்டிசோரி அகாடமியில் தொடக்க இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் புவியியலாளரும், புவியியல் மற்றும் பிற சுவாரசியமான விஷயங்களில் கவனம் செலுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Murali Krishnan is from Chennai and works for Galaxy Montessori Academy as an Elementary Director. He is also a Geographer and passionate about writing articles in Tamil focusing on Geography and other interesting subject areas.
One response
இந்த கட்டுரை மிக சுவாரசியமாக இருந்தது.
எல்லா நதிகளையும்விட காவேரிதான் எனக்கு மிக பிரியமான நதி. கொடகில் மக்கள் “காவேரி அம்மா” என்றுதான் சொல்வது வழக்கம். காவேரி வீட்டின் மகளோ, தாயோ, சகோதரியோ என்றுதான் கருதுகிறார்கள்.
மேலும் என்னவெல்லாம் தெரிந்துகொள்ளலாம் என்று ஆர்வமோடு எதிர்பார்க்கிறேன்.
நன்றி.