சென்ற பதிவில் நான் விட்டுச்சென்ற பாடல் வரிகள் எந்த திரைப்படத்தில் இடம் பெற்றது என்று கண்டுபிடித்தீர்களா? அது 1953ல் வெளிவந்த “அவ்வையார்” திரைப்படத்தில் இடம் பெற்றது. யாரெல்லாம் சரியாகக் கண்டு பிடித்தீர்களோ அவர்கள் இப்பொழுது தங்கள் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். 😊

அப்பாட்டில் இடம் பெற்ற காவேரி என்ற பெயர் நமக்குத் தெரிந்ததே. ஆனால் அப்பாட்டில் இன்னொரு பெயரும் வருகிறதே! அது என்ன? அதுதான் “பொன்னி”. காவேரியின்  மற்றொரு சிறப்பு பெயர். தமிழ் இலக்கியங்களில் காவேரி என்ற பெயர் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வாறே “பொன்னி” என்ற பெயரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நான் முன்பு கூறியதுபோல்  மனிதர்கள் ஆற்றின் கரையில் தங்கள் வாழ்க்கையை அமைத்ததுபோல், அரசாங்கம் கூட ஆற்றை அடிப்படையாகவே கொண்டிருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பிற்கால சோழ மன்னர்கள் காவேரி ஓடிய இடங்களையே தலை நகர்களாகக் கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது. உறையூர், தஞ்சை போன்ற ஊர்கள் காவேரியாலேயே பெயர்பெற்று விளங்கின. சோழ மன்னர்கள் “பொன்னியின் காவலன்” என்றே அழைக்கப்பட்டார்கள். வற்றாத ஜீவநதியாக பொன்னி என்ற காவேரி வருடம் தவறாமல் செழிப்பை அள்ளித்தந்தாள். இன்னமும் தந்து கொண்டிருக்கிறாள்.

ஒரு பாசுரத்தில் வரும் கீழ்க்கண்ட வரிகளை படியுங்கள் :

“திருவரங்கப்பெருநகருள் தெண்ணீர் பொன்னி

திரைக்கையால் அடிவருளப்பள்ளி கொள்ளும்”

                                                                                                                 [பெருமாள் திருமொழி, 1ஆம்  திருமொழி, 1ஆம் பாசுரம்]

பாட்டின் பொருள் : மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் நகரத்தில்.

இது முழு பாசுரம் அல்ல. குலசேகர ஆழ்வார் எழுதிய “பெருமாள் திருமொழி” என்ற ப்ரபந்தத்தில் அமைந்துள்ள ஒரு பாசுரத்தின் சில வரிகள். ஆக “பொன்னி” என்ற பெயரை கவிஞர்களும்/புலவர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள். கி.பி 985 முதல் கி.பி 1014 வரை வாழ்ந்த இராஜராஜ சோழனுக்கு “பொன்னியின் செல்வன்” என்ற பட்டப்பெயர் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

சரி காவேரிக்கு இப்படி பல பெயர்கள் உண்டு. காவேரியில் சேரும் துணை நதிகளுக்கு என்னென்ன பெயர்கள்? பவானி, கபினி, நொய்யல், அமராவதி என்று பல நதிகள் காவேரியில் இணைகின்றன. ஆனால் ஒரு சிறப்பு என்னவென்றால் இவை காவேரியில் இணைந்தவுடன் தங்கள் பெயர்களை இழந்து காவேரி என்ற பெயராலேயே வழங்கப்படுகின்றன.

காவேரி ஆற்றுப் படுகை. மூலம்: https://tinyurl.com/3yh2hsvj இதனுடைய பெரிய படத்தை பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்

மணிமேகலை என்றொரு காவியத்தில் வரும் வரிகள்:

“பாடல்சார் சிறப்பின் பரதத்து ஓங்கிய

கோடாச்செங்கோல் சோழர்தம் குலக்கொடி

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியாதத் தண் தமிழ்ப்பாவை”

                                                                                                                [கடவுள் வாழ்த்து, வரிகள் 22-25 வரை]

பாடல்வரிகளின் பொருள் : பாடுவதற்கான சிறப்பினை உடைய பரத கண்டத்தில் நெறி தவறாது அரசாட்சி புரியும்    சோழர்களின் குலமகளாகிய காவிரி, பருவகாலம் வந்தும் மழை பெய்யாது நீட்டிப்பினும் தன் வள்ளல் குணத்தை என்றும் விடாமல்  வளங் கொடுக்கும் குளிர்ச்சியுடைய தமிழ்ப் பாவையாங் காவிரி.

சோழர் குலக்கொடி, தண்தமிழ்ப்பாவை என்ற சிறப்பு பெயர்களும் காவிரிக்கு உண்டு.

“வான் பொய்பினும் தான் பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி”

                                                                                                                  [பட்டினப்பாலை, பாட்டின் தொடக்க வரிகள் 1 – 7]

பாடல்வரிகளின் பொருள் : மலையில் தொடங்கி கடலில் கலக்கும் காவிரி நதியானவள், மழை பெய்யாமல் போனாலும்  தான் எப்பொழுதும் நகரெங்கும் ஓடி மக்களின் தேவையை நிறைவேற்றுவாள்.

இந்தவரிகள் கி.மு. 4ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரை நீண்டிருந்த சங்ககாலத்தைச் சேர்ந்த “பட்டினப்பாலை” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்த சோழர் குலக்கொடி, தண்தமிழ்ப்பாவை, பொன்னி இன்று பொய்த்துப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். இந்த அவல நிலை என்று மாறும்? நாம் தான் இதற்கு விடைத் தேடவேண்டும்..


நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முயற்சி செய்து பாருங்கள்

  1. பிரிகிளைக்கும் (distributary) துணைநதிக்கும் (tributary) உள்ள வித்தியாசங்கள் என்ன?
  2. கல்லணை எங்கே இருக்கிறது? யார் அதைக் கட்டினார்கள்? எந்த வருடம் கட்டினார்கள்?
  3. ஸ்ரீரங்கம் அருகே பிரியும் காவேரி இன்னொரு பெயருடன் விளங்குகிறாள். அவள் மீண்டும் காவேரியை சந்திக்கிறாளா? கடலில் எங்கே கலக்கிறாள்?
  4. இந்த பதிவில் உள்ள கடினமான அல்லது புதிய வார்த்தைகளின் அர்த்தங்களை அகராதி (dictionary) கொண்டு கண்டுபிடியுங்கள்.

சொற்களஞ்சியம்(Glossary)

தெண்ணீர் – தெளிந்த நீர்

திரை – அலை

கோள் – கிரகம்

கோடை – வெயில் காலம்

நடந்தாய் வாழி காவேரி!


பின்குறிப்பு : படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்

முரளி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். கேலக்ஸி மாண்டிசோரி அகாடமியில் தொடக்க இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் புவியியலாளரும், புவியியல் மற்றும் பிற சுவாரசியமான விஷயங்களில் கவனம் செலுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Murali Krishnan is from Chennai and works for Galaxy Montessori Academy as an Elementary Director. He is also a Geographer and passionate about writing articles in Tamil focusing on Geography and other interesting subject areas.

Categories:

One response

  1. எனக்கு தெரியாத பல விஷயங்களை உங்கள் ஒவ்வொரு பிளாக்கிலிருந்தும் கற்று வருகிறேன். இந்த பாக்கத்தின் கடைசி வரியில் நீங்கள் எழுப்பும் கேள்வி மிக முக்கியமானது : “இந்த அவல நிலை என்று மாறும்?” அதற்கு நீங்கள் அளிக்கும் பதிலும் யோசனை செய்ய வைக்கும்.

    இன்னும் அடுத்தடுத்து வரும் பாகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Share your thoughts

%d bloggers like this: