புத்தாண்டை குதூகலத்துடன் எதிர்கொள்ளும் மனோநிலையில் இருப்பவர்களே..! உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

புத்தாண்டை குதூகலத்துடன் எதிர்கொள்ளும் மனோநிலையில் இருப்பவர்களே..! உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பொருளாதார தாராளமய உலகில், பிப்ரவரி 14ம் தேதியே மிகவும் பிரபலமாகிவிட்டபோது, புத்தாண்டு கொண்டாட்டம் என்பது முக்கியத்துவம் பெறாமல் போகுமா என்ன? கிரெகொரியன் நாள்காட்டியின்படிதான் (Gregorian Calender) நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டை அனுசரிக்கிறோம். இந்த கிரெகொரியன் நாள்காட்டிதான் உலகெங்கிலும் பரவலான நாடுகளில் பின்பற்றப்படும் ஒரு உள்நாட்டு (civil) நாள்காட்டியாக உள்ளது. அது ஏன் என்று கேட்கிறீர்களா?

வெள்ளைக்காரர்கள் உலகின் பல நாடுகளை கட்டி ஆண்டார்கள் அல்லவா; அதுதான். அதேசமயம், இந்த உலகில் வேறுபல நாள்காட்டிகள் நடைமுறையில் உள்ளதையும் நீங்களெல்லாம் நிச்சயம் அறியாமல் இருக்கமாட்டீர்கள்..! அந்தவகையில், உலகில் ஒரு புத்தாண்டல்ல, பல புத்தாண்டுகள் பிறந்துகொண்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு புத்தாண்டும் வேறுவேறு நாட்களில் வருகின்றது.

இந்தக் கட்டுரை, நாள்காட்டிகள் தொடர்பான அறிவியலைப் பற்றி அலசப்போகிறது என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடாதீர்கள் மாணாக்கர்களே..! அப்படியெல்லாம் இல்லை. இப்போது பிறக்கப்போகும் 2017ம் ஆண்டில், உலக அரங்கில் என்னென்ன சுவாரஸ்யங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளன என்பதைப் பற்றி ஒரு மேலோட்டப் பார்வையை செலுத்துவதே இக்கட்டுரை. இதோ, நம் கண்களைத் திறப்போமா..!

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

நாமெல்லாம் அமெரிக்கா என்று சுருக்கமாக அழைக்கும் உலகின் மிக முக்கியமான வலிமைவாய்ந்த ஒரு நாட்டின் ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டிருப்பவர் விமர்சனங்களின் நாயகனாகத் திகழ்கிறார். தேர்தலில் போட்டியிடும்போதுதான் அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வட்டமிட்டன என்று பார்த்தால், பலரும் எதிர்பாராதவிதமாக வெற்றிபெற்று அதிபர் பதவியேற்றும்கூட, பரபரப்பின் மையமாகத்தான் திகழ்கிறார். பல அமெரிக்கர்கள், தங்களின் புதிய ஜனாதிப‍தியை “சுதந்திர உலகின் தலைவர்” என்றும் அழைக்கின்றனர். இது உண்மையில் ஒரு விசித்திரமான கருத்துதான். இதுபோன்ற விசித்திரங்கள் எங்கும் உண்டு..!

காலனியாதிக்க காலம் என்று சொல்லப்பட்ட சமயத்தில், பிரிட்டன் நாடே உலகின் செல்வாக்கு வாய்ந்த மற்றும் வலிமையான நாடாக விளங்கியது. இரண்டாம் உலகப்போரின் வரையிலும்கூட அந்த நாட்டின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை என்றே சொல்லலாம். ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான காலகட்டங்களில் சோவியத் யூனியன் – அமெரிக்கா என்று இருதுருவ உலகம் உண்டானது. ஒருகட்டத்தில், சோவியத் யூனியன் வீழ்ந்துபோக, அமெரிக்கா மட்டும் சிலகாலம் ஒற்றை வல்லரசாக உலகை ஆட்டிப் படைத்தது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் நிலைமை மிகவும் மாறிவிட்டது. அமெரிக்காவின் பாச்சாவெல்லாம் எல்லா இடத்திலும் பலிப்பதில்லை. பல நாடுகள் அமெரிக்காவை, வந்துபார் என்று சொல்லும் நிலையில் உள்ளன.

சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளை அதற்கு உதாரணமாய் சொல்லலாம். ஒவ்வொரு நாடும், தம்மை ஏதாவதொரு விதத்தில் வலிமைப்படுத்திக்கொண்டு வருவதால், அமெரிக்காவால் எல்லா இடத்திலும்போய், எல்லா சூழ்நிலையிலும் வாலை ஆட்ட முடிவதில்லை.

ஈராக் பாணியில், சிரியாவையும் கைப்பற்றி, உலகின் எண்ணெய் – எரிவாயு சந்தையில் கோலோச்ச வேண்டுமென்று நினைத்த அமெரிக்காவின் நினைப்பில் மண் விழுந்துள்ளதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ரஷ்யாவும் ஈரானும் அமெரிக்காவை விடுவதாயில்லை. சிரியப் போரில், அமெரிக்கா ஏறக்குறைய தோற்கும் நிலையில்தான் உள்ளது. எனவே, அவர்கள் பேரம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பெரிய வணிகக் கூட்டாளியாக உள்ள சீனா, பசிஃபிக் பிராந்தியத்தில் தன் செல்வாக்கை பெருக்கிக்கொள்ள என்னென்னவோ செய்துவருகிறது!

தென்சீனக் கடலில்(South China sea) ஒரு செயற்கைத் தீவையே உருவாக்கி, அதில் தனது ராணுவதளத்தை நிறுவுகிறது சீனா (China). ஏன் இப்படி? என்று கேட்டால், ஃபிலிப்பைன்ஸ் (Philippines) மற்றும் ஜப்பான் (Japan) ஆகிய நாடுகளின் தீவுகள் தவிர, வேறுபல பசிஃபிக் தீவுகளில் (Pacific Islands) அமெரிக்கா அமைத்திருக்கும் மற்றும் அமைத்துவரும் ராணுவ தளங்களுக்கு பதிலடியாகவும், தன்னுடைய பாதுகாப்புக்காகவுமே இதை செய்வதாக கூறுகிறது சீனா. அவரவர் நியாயம் அவரவருக்கு..!

தென்சீனக் கடலிலிருந்து பார்வையைக் கொஞ்சம் இந்தப் பக்கம் திருப்பினோமென்றால், இங்கும் பல அதிர்ச்சிகள் காத்துக்கொண்டுதான் உள்ளன. பாகிஸ்தான் (Pakistan) மற்றும் ஆஃப்கானிஸ்தான் (Afganistan) போன்ற நாடுகளில் தனது ராணுவ தளங்களை வைத்துள்ளது அமெரிக்கா. அதேசமயத்தில், இந்தியாவையும் விட்டுவிடவில்லை அமெரிக்கா. இந்தியாவும் அதன் பாதுகாப்பு கூட்டாளியே! இந்தியாவிற்கும் இப்படி கூட்டாளியாக இருப்பதில் எந்த மனவருத்தமும் கிடையாது.

ஏனென்றால், நமக்கு சீனா எனும் ஒரு பிரச்சினை இருக்கிறதே. எனவே, அமெரிக்காவின் கூட்டணிக்குள் இருப்பதை பாதுகாப்பானதாகவே நினைக்கிறது இந்தியா. அமெரிக்காவின் மேற்கண்ட வியூகத்தை, அரசியலில், “ஆளுகைக்குள் கொண்டுவருதல்” (Containment) என்று சொல்வார்கள்.

ஆசியா, ஐரோப்பா மற்றும் தென்அமெரிக்கா என்று பல கண்டங்களில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் அமெரிக்கா, காலனியாதிக்க நாடுகளால் கடந்த நூற்றாண்டுகளில் நன்றாக கொள்ளையடித்து சுரண்டப்பட்ட ஆஃப்ரிக்காவின் மீது மட்டும் இன்னும் பெரியளவில் தனது கவனத்தை செலுத்தாமல் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்துவரும் சீனாவின் செயல்பாடுகளும் கவனமும் ஆஃப்ரிக்காவை பெரியளவில் ஆக்ரமித்துள்ளதை நாம் பார்க்க வேண்டும்.

சீனா

இப்போது என்றில்லை, கடந்த பல்லாண்டுகளாகவே ஆஃப்ரிக்காவின் மேல் சீனாவுக்கு ஒரு கண்! ஒரு கண் என்றில்லை; பல கண்கள் இருக்கும்போலும். ஏனெனில் அதன் நடவடிக்கைகள் அப்படி. ஆஃப்ரிக்க கண்டத்தின் வடக்கே பிரமாண்டமாய் பரந்து விரிந்திருக்கம் சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே அமைந்த சப் – சஹாரன் (Sub-Saharan) என்ற பிராந்தியத்தில் தனது பிடியை வலுவாக இறுக்கி வருகிறது பீங்கான் தேசம்.

நன்றி Google

பிடியை இறுக்குகிறது என்றால் எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்? ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறான உள்கட்டுமானங்களில் அதிக முதலீடு செய்துவருவதன் மூலமே தன் பிடியை இறுக்குகிறது சீனா. வெறும் பொருளாதார செல்வாக்கு மட்டுமல்ல, அரசியல் செல்வாக்கையும் வளர்த்து வருகிறார்கள் சீனர்கள்.

இங்கு நிலைமை இப்படி இருக்க, இப்போது அமெரிக்காவிற்கு வருவோம். தற்போதுவரை, ஏதோவொரு காரணத்தால் ஆஃப்ரிக்காவைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் அமெரிக்கா, ஒருநாள் திடீரென ‘ஆஹா! ஆஃப்ரிக்காவை விட்டுவிட்டோமே..!’ என்று சுதாரித்து ஓடிவந்தால், அங்கு ஏற்கனவே நன்றாக கட்டில் போட்டு படுத்திருக்கும் சீனாவுடன் பெரியளவில் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும். அமெரிக்கா அங்கே வரும்போது பார்க்கத்தானே போகிறோம் என்கிறீர்களா? சரி.

ஆஃப்ரிக்கா மட்டுமல்ல, தெற்காசியப் பிராந்தியத்தில்(South Asia), பாகிஸ்தான் (Pakistan), இலங்கை (Srilanka) மற்றும் பங்களாதேஷ் (Bangladesh) போன்ற சிறிய நாடுகளிலும் பலவிதமான முதலீடுகளை மேற்கொண்டு, இந்தியாவின் கழுத்து மற்றும் தோளை சுற்றி ஒரு சிக்கலான வளையத்தைப் போட்டு வருகிறது சீனா.

இதில், பாகிஸ்தானுடனான சீனாவின் உறவு மிகமிக முக்கியமானது. அதற்கான காரணம் உங்களுக்கும் தெரியும்! (எதிரிக்கு எதிரி நண்பன்). பாகிஸ்தானுடன் அணுதிறன் கட்டமைப்பு (Nuclear Capability) பணியில் எந்த ஒளிவுமறைவுமின்றி அனைவருக்கும் தெரியும் வகையிலேயே ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகிறது சீனா. ஆனால், வழக்கம்போல ‘இது ராணுவ நோக்கத்திற்காக அல்ல’ என்ற சலித்துப்போன பல்லவியையே இதற்கும் பாடுகிறார்கள் இருநாட்டினரும். கேட்க விரும்புபவர்கள் காதுகொடுத்துக் கொள்ளட்டும்!

ஆசியாவின் பெரிய அண்ணனாக யார் இருப்பது என்ற போட்டி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நீண்டநாட்களாகவே உண்டு. அப்போட்டியில் சீனாவின் கை பலநேரங்களில் ஓங்கியிருப்பதையும் பார்த்திருக்கிறோம். அதேசமயம், நாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும்விதமாய் பலநேரங்களில், பல விஷயங்களில் அவர்களை விஞ்சியும் நின்றிருக்கிறோம்.

இந்தியாவிற்கு, தன்னால் முடிந்தளவிற்கு பலவிதங்களிலும் தொல்லைகள் கொடுப்பதை தன் முதன்மை கடமையாக சிரமேற்கொண்டு செய்துவருகிறது சீனா. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகவிடாமல் முட்டுக்கட்டைப் போடுவது, இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருக்கும் பல தீவிரவாத அமைப்புகளை ‘பயங்கரவாத அமைப்புகள்’ என்று அறிவிக்கவிடாமல் ஐ.நா., மன்றத்தை தடுப்பது, காரகோரம் (Karakoram) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (Arunachal Pradesh) போன்ற இந்தியப் பகுதிகளுக்குள் அடிக்கடி ஊடுருவி சலசலப்பை ஏற்படுத்துவது, இந்தியப் பகுதிகளுக்குள் வாழும் காஷ்மீர் (Kashmir) பிரிவினைவாதிகளுக்கு தனி சட்டவிரோத விசா வழங்குவது உள்ளிட்ட பல்வேறான விஷயங்களை மூச்சுவிடாமலோ அல்லது மூச்சுவிட்டுக்கொண்டோ பட்டியலிடலாம். என்ன? நான் மூச்சுவிட்டுக்கொள்ளவா..! நன்றி!

பிரிட்டன்

ஒருகாலத்தில் உலகை ஆட்டிப்படைத்த நாடான பிரிட்டன், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இரண்டாம்தர சக்தியாகிவிட்டது. இன்றைய நிலையில், சர்வதேச பரிமாணங்களுடன் (International dimensions) தொடர்புடைய தனது சொந்தப் பிரச்சினைகள் பலவற்றுடன் அல்லாடிக் கொண்டுள்ளது அந்நாடு.

கடந்த 2016ம் ஆண்டு ஜுன் 24ம் தேதி நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் (Brexit), ஐரோப்பிய யூனியனிலிருந்து (European Union) பிரிட்டன் வெளியேற வேண்டுமென அந்நாட்டு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், அந்த திடீர் தீர்ப்பின் வழியாக, பல புதிய சிக்கல்கள் முளைத்து நிற்கின்றன.

நன்றி Google

பல ஐரோப்பிய நாடுகளையும், யூரோ (Euro) எனப்படும் ஒரு பொது நாணயத்தையும் கொண்ட மிகப்பெரும் அமைப்புதான் ஐரோப்பிய யூனியன் என்பது உங்களில் பலருக்கும் தெரியும். இத்தகைய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பிலிருந்து திடீரென வெளியேறிவிட்டால், விளைவுகள் சாதாரணமாக போய்விடுமா என்ன? எதிராக வாக்களிப்பதற்கு எளிதாகத்தான் இருந்தது. ஆனால், அதன் வழியான நடைமுறை சிக்கல்கள் கடினமாக உள்ளனவே..!

அந்த சிக்கல்களை கொஞ்சம் லேசாக பார்த்துவிடலாமே – பிரிட்டனுக்கு வரும் இதர ஐரோப்பிய யூனியன் குடிமக்கள் அந்நாட்டில் குடியிருப்பது, பணிசெய்வது மற்றும் இதர தேவைகளை நிறைவுசெய்வது, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குச் செல்லும் பிரிட்டன் குடிமக்களின் நிலை, அவர்கள் எப்படி அங்கே குடியிருப்பார்கள்? பணி செய்வார்கள்? இதர வேலைகளை கவனிப்பார்கள்? பன்னாட்டு நிறுவனங்கள் பிரிட்டனிலும், ஐரோப்பிய யூனியனிலும் எவ்வாறான தனித்தனி நிலைகளை மேற்கொள்ளும்? பிரிட்டனிலிருந்து தாங்கள் வெளியேறப் போவதாய் அறிவித்துள்ள சில சர்வதேச நிறுவனங்களால் ஏற்படவுள்ள விளைவுகள், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியதால் பிரிட்டனுக்கு நேரும் பொருளாதார பாதிப்புகள், இப்படியான ஏராளமான சிக்கல்களை இடையில் இந்தமுறை மூச்சுவிட்டுக்கொண்டே உங்களிடம் சொல்லிவிட்டேன்.

இப்படி, எத்தனையோ கேள்விகள் மற்றும் சிக்கல்கள், சம்பந்தப்பட்டவர்கள் முன்னால் வந்து நடனமாடிக் கொண்டுள்ளன. அதை ரசிப்பதும் கைதட்டுவதும் அவர்கள் பாடு..!

இன்னொரு முக்கியப் பிரச்சினை உள்ளது. சிரியா மற்றும் வடக்கு ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்து கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் புறப்படும் அகதிகள், மத்திய தரைக்கடலின் தண்ணீரிலும், தங்களுடைய கண்ணீரிலும் மிதந்து, ஐரோப்பாவின் தெற்குப் பகுதியில் கரைசேர்ந்து, அந்நாடுகளுக்கு கரை காண முடியாத பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். அந்நாடுகளின் பெரும்பான்மை மக்கள், புகலிடம் தேடி ஓடி வருபவர்களை ஏற்கும் மனநிலையில் இல்லை. உண்மையில் இதுவொரு இடியாப்ப சிக்கல்..!

அமெரிக்கா – பிரிட்டன் ஆகிய 2 நாடுகளுக்கு இடையே கடந்த பல்லாண்டுகளாக நிலவிவரும் ஒரு விசேஷ உறவுநிலையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக் யுத்தங்கள் உள்பட, பல முக்கிய உலக விவகாரங்களில், அமெரிக்காவின் உற்ற தோழனாய் பிரிட்டன் விளங்கி வந்ததை மீடியாக்களின் மூலம் தெரிந்துகொண்டவர்கள்தான் நாம். ஆனால், இப்போது டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்க அதிபராக இருக்கிறார். இவர், பிரிட்டனுடனான உறவை எப்படி கையாள்வார் என்பது மில்லியன் ‘அமெரிக்க’ டாலர் கேள்வி..!

சீனாவைச் சேர்ந்த பல செல்வந்தர்கள், நிறைய சொத்துக்கள் மற்றும் நிலங்களை பிரிட்டனில் வாங்கி குவித்து வருகிறார்கள். பிரிட்டனுக்காக, அதன் சொந்த மண்ணிலேயே அணுஉலை (Nuclear Reactor) கட்டிக்கொடுக்கும் பணியை சீனா மேற்கொள்வதற்கான சூழலும் தென்படுகிறது தெரியுமா..! என்ன, ஆச்சர்யத்தில் வாயைப் பிளக்கிறீர்கள்..! அதுதான் உலகம்; அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும். இந்தவகையில் பார்க்கையில், முன்னாள் வல்லரசான பிரிட்டனில்கூட, இந்நாள் வல்லரசாக துடிக்கும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
அறியாமை எவ்வளவு அதிகமோ, அதேயளவிற்கு கவலையும்..!

இந்தியா

எட்டி எட்டிப் பார்த்து, எங்கெங்கு என்ன நடக்கிறது என்பதையெல்லாம் அலசிக் கொண்டிருக்கும் வேளையில், நம் காலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்காமல் இருந்தால் எப்படி? வேறு ஒன்றுமில்லை, இந்தியாவைத்தான் சொல்கிறேன்.

சீனாவின் பதிலடிகளைப் பார்த்து நாம் ஒன்றும் சோர்ந்துவிடவில்லை. நம்முடைய எதிர்வினைகளையும் ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ஆஃப்கானிஸ்தானில், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ராணுவத்துறை ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளோம். ஆஃப்கன் பிராந்தியத்தில், பாகிஸ்தானின் செல்வாக்கை முடிந்தளவிற்கு மட்டுப்படுத்த வேண்டுமென்பதே இதன் பிரதான நோக்கம்.

ஆனால், நோக்கம் வலுவானதாக இருந்தாலும், எதிரே நிற்கும் இடைஞ்சல்கள் அதைவிட வலுவாக உள்ளன. பாகிஸ்தானுக்குப் பின்னால் சீனா நின்றுகொண்டு, அதை தாங்கிப்பிடித்துக் கொண்டு இருப்பதால், பாகிஸ்தானை பலவீனப்படுத்த நினைக்கும் நம்முடைய முயற்சிகள்தான் பலமிழக்கின்றன.

நன்றி Google

ஆஃப்கன் பிராந்தியத்தில் சவால்கள் இருந்தாலும், அதற்காக ஒன்றும் சளைத்துவிடவில்லை இந்தியா. வேறுபல தெற்காசிய நாடுகளான வங்கதேசம் (Bangladesh), பூடான் (Bhutan), நேபாளம் (Nepal), இலங்கை (Srilanka) மற்றும் மாலத்தீவுகள் (Maldives) ஆகியவை உட்பட, மியான்மரிலும் (Myanmar) தனது முதலீடுகளை மேற்கொண்டு, அந்நாடுகளுக்கு கடன் வழங்குதல், ராணுவக் கூட்டு போன்ற ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சீனாவுக்கு எதிராகவும், வேறுபல உலக சக்திகளுக்கு எதிராகவும் தனது பிராந்தியத்தில் தன் வலிமையை நிரூபிக்க ஓயாமல் முயன்று வருகிறது இந்தியா.

நாம், இப்போது எத்தகைய பொருளாதார உலகில் வாழ்கிறோம் என்பதை ஒரு சிறு உதாரணத்துடன் புரிந்துகொள்ளலாம்: நாம் ஒரு நாட்டிடம் குறிப்பிட்ட ஆயுத தளவாடங்களை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை திடீரென ரத்துசெய்து விடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்; உடனே, அந்த சம்பந்தப்பட்ட நாட்டில் பலநூறு வேலை இழப்புகள் ஏற்பட்டுவிடும்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில், உயர்தொழில்நுட்ப அறிவும், திறன்களும் தேவைப்படும் பணிகள் பலவும் வேறுநாட்டவர்களுக்கு சென்றுவிடுகின்றன. தன் ஏரியில் தனக்கு வரவேண்டிய மீனை வெளிநாட்டு கொக்குகள் கொத்திக்கொண்டு போனால், உள்ளூர் கொக்குகளுக்கு கோபம் வராதா என்ன? இந்நாடுகளின் பள்ளி மற்றும் பல்கலைக்கழக அளவிலான கல்விமுறை அதிசிறப்பு வாய்ந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், அந்நாடுகளின் பல்கலைக்கழகங்களில் படிக்க பல வெளிநாட்டினர் அலைமோதுகின்றனர் என்பதே உண்மை. இதில், சீனா மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மிக அதிகம்.

இந்தவகையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து திறன்வாய்ந்த மனிதவளம் அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆனால், சமீப காலங்களாக, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருவதால், இந்தியா மற்றும் சீன நாட்டு மாணாக்கர்கள் மற்றும் உயர்திறன்வாய்ந்த பணியாளர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் சுருங்கிவிட்டன. உள்நாட்டினருக்கு ஏற்படும் வேலையிழப்பு கொந்தளிப்புகளே இத்தகைய மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டுமா என்ன?

நன்றி Google

இப்படி வெளிநாட்டு வாய்ப்புகளை இழந்த இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த மனிதவளங்கள், சொந்த நாடுகளிலேயே தங்களுக்குப் பொருத்தமான வாய்ப்புகளைத் தேடிக்கொள்ள இயலுமா? இந்தியப் பொருளாதாரம் அத்தகைய பரந்த வாய்ப்புகளை அளிக்கத்தக்க ஒன்றாக வளர்ச்சியடைய வேண்டும். (முதல்தர, இரண்டாம்தர மற்றும் மூன்றாம்தர வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து உங்கள் பாடப்புத்தகங்களில் படித்ததை நினைவிற்கு கொண்டு வாருங்களேன்!)

ஆகமொத்தத்தில், இந்த 2017ம் ஆண்டு, பலருக்கும் கடினமான ஒரு ஆண்டாக திகழப்போகிறது என்பதே உண்மை.

(முற்றும்)

Categories:

Tags:

No responses yet

Share your thoughts

%d bloggers like this: