என்ன… தலைப்பே ஒருமாதிரி இருக்கிறது..! என்றுதானே பார்க்கிறீர்கள்..!

எல்லாம் காரணத்தோடுதான்..! இன்றைய உலகத்தின் பொருளாதார செயல்பாடு அப்படித்தானே இருக்கிறது..! எனவே தலைப்பும் அதற்கேற்றபடிதான் இருக்க வேண்டியுள்ளது.

மகாத்மா காந்தியின் ஒரு புகழ்பெற்ற பொன்மொழி உண்டு,

“ஒவ்வொரு மனிதனின் தேவையையும் முழுமையாக நிறைவுசெய்வதற்கான போதுமான வளங்களை இந்த பூமி கொண்டுள்ளதே தவிர, அவனின் பேராசையைப் பூர்த்திசெய்வதற்காக அல்ல” என்பதுதான் அந்தப் பொன்மொழி.

ஆனாலும், தம் தேவைக்கு அதிகமானவற்றை பெறும் வகையில், அதற்கு பணம் தரமுடிகிற நிலையில் இருப்பவர்கள், பெரும்பாலான நேரங்களில் அதைப் பெற்றும் விடுகிறார்கள்.
நாமே பல இடங்களில் பார்த்திருப்போம். அளவுக்கதிகமாக கையில் பணம் வைத்திருப்பவர்கள், அதை எப்படி செலவழிப்பது என தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்கள்.

எனவே, தங்களின் தேவைக்கு மீறி, தங்களுக்கு தேவையேயில்லாத, வெறுமனே வெற்று ஆடம்பரமாக வைத்துக்கொள்ளத்தக்க பொருட்களை வாங்குவது குறித்து யோசிப்பார்கள்.

அதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் செலவுசெய்ய தயாராக இருப்பார்கள். கொள்ளை லாபம் ஒன்றே குறியாய் செயல்படும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பிடித்தமான வாடிக்கையாளர்கள் இந்த வகையறா மக்கள்தான்.

பணம் கொடுத்து நினைத்ததை அடைந்துவிட்டோம் என்ற திருப்தி அவர்களுக்கு இருக்கலாம்தான். ஆனால், அவர்கள் பெற்ற பொருட்களுக்கான உண்மையான மதிப்பைத்தான் அவர்கள் கொடுத்திருக்கிறார்களா என்றால், அதற்கான பதில் நிச்சயம் ‘இல்லை’ என்பதே.

நாம் மனிதனை மையப்படுத்திய உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை இன்று கண்கூடாக காண்கிறோம். புவியின் சுற்றுச்சூழல் மீதான நமது நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படும் நிலைக்கு வந்துள்ளன.

ஒரு இடத்தில் நிலவும் தேவைகள், அங்குள்ள சுற்றுச்சூழலின்பால் தீவிர எதிர்விளைவுகளைக் கொண்டுள்ளது மட்டுமின்றி, தொலைதூர இடங்களிலும் அடிக்கடி தனது தாக்கத்தை செலுத்துகின்றன என்பதை யோசிப்பது அவசியம்.

அதாவது, நம்மிலிருந்து தொலைதூரத்திலுள்ள இடங்களின் சுற்றுச்சூழலுக்கு நிகழும் பாதிப்புகள்கூட, நமக்கு கேடு விளைவிக்கும் என்பதுதான் இதன் பொருள். (எனவே, எங்கோ ஏதோ நடந்துவிட்டுப் போகிறது, அதனால் நமக்கென்ன? என்றெல்லாம் யாரும் இருந்துவிட முடியாது.)

இறுதியாக, குறிப்பிட்ட இடங்களில் வாழும் மக்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் எதிர்மறை விளைவுகளை சந்தித்து சிதைவுறுகின்றன. மனிதன் என்பவன் சுற்றுச்சூழலின் ஒரு பகுதிதான். அவன் அதிலிருந்து விலகியவனோ அல்லது அதற்கு மேலானவனோ கிடையாது.

பருவநிலை மாற்றம் (நன்றி Google)

நமது பாச்சாவெல்லாம் இயற்கையிடம் ஒருபோதும் பலிக்காது..! நமது தேவைகள் ஒரு எல்லையளவைத் தாண்டி பேராசையாக மாறுகையில், வாழ்க்கையானது நிச்சயத்தன்மையை இழக்கிறது.
மேலும், இந்த உலகின் அம்சங்கள் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டுள்ளன. அங்கேதானே பாதிப்பு, அதனால் இங்கே என்ன நடந்துவிடப்போகிறது என்றெல்லாம் நாம் அலட்சியமாக நினைத்துவிட முடியாது.

எனவே, நாம் (பொருளை) பெறக்கூடிய இடத்தில் இருந்தாலும் சரி அல்லது வழங்கக்கூடிய இடத்தில் இருந்தாலும் சரி, இருசாராருமே பாதிக்கப்படுகிறோம்.

சமீபத்திய தரவுகளிலிருந்து இரண்டு உதாரணங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அமேசான் மழைக்காடுகளில் நிகழும் வரன்முறையற்ற அழிப்புத் தொடர்பானதுதான் அந்த முதல் தரவு. அமேசான் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதீத வன அழிப்பு நடவடிக்கைகள், உலகளவில் ஏற்படுத்தும் மோசமான சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி நாம் கேட்டறிந்திருப்போம் அல்லது படித்திருப்போம்.
(உலகிலேயே மிக அதிகளவு ஆக்சிஜனை பம்ப் செய்பவை அமேசான் காடுகள்தான் என்பதை நீங்கள் பலரும் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்)

அமேசான் மழைக்காடு (நன்றி Google)

இதன்மூலமாக, அமேசான் படலம் பெரியளவில் பாதிப்படைவதோடு, பசுமை-இல்ல வாயுக்களின் (Greenhouse Gases) வெளியேற்றமும் அதிகரித்து, பருவநிலை மாறுபாடு நிகழ்கிறது.
இந்த அளவு வரைதான் நீங்கள் பொதுவாக உங்களுடைய பாடப்புத்தகங்களில் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், அதன்மூலம் நிறைய செடிகளை நட்டு மரம் வளர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்…!

ஆனால், இது நமது படத்தின் ஒரு காட்சி மட்டுமே. அதாவது, இடைவேளை வரையிலான காட்சி மட்டுமே. இன்னும் அதிக சீன்களைக் கொண்ட இரண்டாவது காட்சி இதன் பிறகுதான்.
வன அழிப்பு, அதாவது, காடுகளை அழிப்பதென்பது, அப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வில் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது.

வனஅழிப்பு மூலம் உண்டாகும் விளைவுகளால் இறுதியில் நிகழ்வது என்னவென்று பார்த்தால், அந்த அழிவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தேவையற்ற ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட பல்வேறான தயாரிப்புகள், எந்த நாட்டு மக்களின் கைகளில் அதிகளவு செல்வம் புழங்குகிறதோ, அவர்களின் ஆடம்பர நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

அமேசான் மழைக்காடு அழிப்பு (நன்றி Google)

ஓரிடத்தில் ஒரு சந்தை இருந்தால், அந்த சந்தைக்கு என்ன தேவையோ, அவற்றை வழங்க தேவைக்கும் அதிகமான மக்கள் தயாராக இருப்பார்கள். இதற்கு பெயர்தான் முதலாளித்துவம்..!

அமேசான் பிராந்தியத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் என்பவை, வெறுமனே காடுகளை அழிப்பதால் மட்டுமே ஏற்படும் விளைவல்ல, அமேசான் அமைப்பில் பரவியுள்ள வேறுபல சிறு நதிகளின் மேல், பல இடங்களில் கட்டப்படும் அணைகளின் விளைவும்தான் அவை. நீர் மின்சார உற்பத்தி என்பதை முதன்மை காரணமாக வைத்து கட்டப்பட்டவையே அந்த அணைகள்.

அமேசான் படுகையில் தாதுவளங்களை வெட்டியெடுக்கும் பணியில், உலகின் பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன (நாம் முதலில் சொன்னோமே, அந்தமாதிரி நிறுவனங்கள்தான் அவை).

தென் அமெரிக்கா மற்றும் வேறுபல இடங்களில் இயங்கும் பல்வேறான தொழிற்சாலைகளுக்கு அங்கே வெட்டியெடுக்கப்படும் தாதுக்கள் தேவைப்படுகின்றன.

அந்த வளமான பகுதிகளில் காலங்காலமாக வாழ்ந்துவரும் பூர்வகுடி மக்கள்தான், இத்தகைய நடவடிக்கைகளால் மிக மோசமாக பாதிக்கப்படும் முதல் பலிகடாக்கள்..!

அவர்களுடைய சுற்றுச்சூழலில் விரவியிருக்கும் பல்வேறான அம்சங்களில், தங்களுடைய வாழ்வின் தேவைக்காக (விருப்பம் அல்ல) அவர்கள் சார்ந்திருப்பது டொராடோ கேட்ஃபிஷ் என்ற ஒரு மீன் வகையைத்தான். எத்தனையோ விஷயங்களில் இந்த மீனும் ஒன்று. அந்த மக்களுடைய உணவுப் பட்டியலில் இது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது..!

டொராடோ கேட்ஃபிஷ் (நன்றி Google)

அமேசான் படுகையை, அட்லஸ் வரைபடத்தை பயன்படுத்தி, விரிவான முறையில் ஆராய்ந்து பாருங்கள். பல்வேறான சிக்கல்வாய்ந்த பெரிய அமைப்பின் அங்கமாய் பல நீரோடைகள்,‍ வெவ்வேறான அளவுகளில் அங்கே ஓடிக்கொண்டிருப்பதைக் காணமுடியும்.

இந்த நீரோடைகள்தான், மாபெரும் வல்லமை வாய்ந்த அமேசான் நதியை உருவாக்குபவை. இந்த நீரோடைகள், அமேசான் வன அமைப்பின் ஒரு முக்கியப் பகுதி.

முந்தையக் கட்டுரையில், சஹாரா பாலைவனம் மற்றும் அமேசான் மழைக்காடு ஆகிய இரண்டிற்கும் இடையிலான தொடர்பைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அமேசான் நதி, மழைப்பொழிவு, சஹாரா பாலைவனத்திலிருந்து எழும் மணற்புயல் உள்ளிட்ட பல்வேறான அம்சங்கள் தங்களுக்கிடையில் பின்னிப் பிணைந்து ஒருங்கிணைந்துள்ளன.
பாலைவனத்திற்கும், நதிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் ஆச்சர்யமடைவது தெரிகிறது! இதற்கெல்லாம் விளக்கம் உண்டு… கவலை வேண்டாம்.

இந்த பிரமாண்ட அமைப்பில் உள்ளடங்கிய ஒரு அம்சமான டொராடோ கேட்ஃபிஷ் என்ற, அதிகபட்சம் 2 மீட்டர் வரை வளரக்கூடிய அந்த மீன், அமேசான் பிராந்தியத்தில் வாழும் பெரும்பாலான பூர்வகுடிகளின் மிக முக்கிய உணவு.

இந்த மீன் இனமானது, ஆண்டிஸ் மலையிலிருந்து, அமேசான் நதியின் முகத்துவாரம் வரையில், ஏறக்குறைய 11,600 கி.மீ தொலைவிற்கு இடம்பெயர்ந்து வருகிறது. இந்த வழக்கத்திற்கு மாறான பிரமாண்ட இடப்பெயர்வு எனும் ஆச்சர்யம் இப்போதுதான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அமேசான் படுகையில் தற்போது மனிதப் பேராசை நடவடிக்கைகளால் (நிறுவனவியத்தால்) ஏற்பட்டுவரும் விரும்பத்தகாத மற்றும் பேரழிவு நடவடிக்கைகள், இந்த தனிச்சிறப்பு வாய்ந்த மீன்களின் இடப்பெயர்வை பெரும் பாதிப்பிற்குள்ளாக்குகின்றன.

இந்த மாபெரும் சிக்கல்வாய்ந்த பிரச்சினை குறித்து இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள, இதோ இந்த அற்புதமான, அறிவார்ந்த தகவல்களை உள்ளடக்கிய யூடியூப் வீடியோவைப் பாருங்களேன்;

நுகர்வுப் பயன்பாடு Vs சூழல் பன்முகத்தன்மை

இடைவேளைக்குப் பிறகான காட்சி, வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள் தொடர்பானது. அதாவது, ‘உலகின் வடக்கு’ என அழைக்கப்படும் பகுதி தொடர்பானது.

இப்பகுதியில்தான் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம் போன்றவை அதிகம்.
நாம் முன்பு சொன்ன பெருமக்கள் இவர்கள்தான்..!

இத்தகைய பொருளாதார வளம், அம்மக்களின் நுகர்வு எல்லையை வேறுவகையான தளங்களுக்கு விரிவடையச் செய்கிறது. (கையிலிருக்கும் பணத்தை காலிசெய்வது எப்படி என மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் பாவப்பட்ட மக்கள்..!)
இந்தவகை நுகர்வு ‘ஆடம்பர நுகர்வு’ என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அதாவது, நளினமான முறையில் திட்டாமல் திட்டுவது..!

வளர்ச்சியடைந்த பொருளாதார நாடுகளில் நிலவும் இத்தகைய ஆடம்பர தேவைகளை ஈடுசெய்ய, தற்போது நடப்பிலுள்ள பொருளாதார தாராளமயம் என்ற கொள்கை உதவிசெய்து, அதன்பொருட்டு, பொருட்களையும் அதுசார்ந்த சேவைகளையும் ஓரிடத்தில் கொண்டுவந்து சேர்க்கிறது.

இக்கட்டுரை, அமெரிக்கா மற்றும் அங்கே நுகரப்படும் பொருட்கள் குறித்தான ஆய்வில் கவனம் செலுத்துகிறது.

அமெரிக்காவின் நுகர்வுப் பயன்பாட்டு முறை மற்றும் அந்த நுகர்வுக்கான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் நிகழும் இயற்கை சீர்கேடு ஆகிய இரண்டையும் இது இணைக்கிறது. கீழ்கண்ட படக்காட்சியில் காஃபி (கொட்டை வடிநீர்) நுகர்வு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

ஒரு புகழ்பெற்ற சர்வதேச பத்திரிக்கையில் வெளியான இதுதொடர்பான கட்டுரையில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியவை உலகின் பிரதான நுகர்வு சமூகங்களாகவும், உலகின் இதரப் பகுதிகள், அச்சந்தைகளின் தேவைகளை ஈடுசெய்பவைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு, உற்பத்தி பகுதிகளில், சூழலியல் பன்முகத்தன்மைக்கு நிகழும் தீவிரமான பாதிப்பு மற்றும் வகைப்பாடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஏதோ, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நுகர்வுப் பழக்கம் மட்டுமே இயற்கைச் சூழலை பாழ்படுத்தவில்லை. இந்த அழிவுச் செயல்பாட்டில் இந்தியாவின் பங்கும் உண்டு தெரியுமா?

ஆமாம். நாமும் குற்றவாளிகள்தான்!

நுகர்வு மற்றும் அதற்கான தேவையை ஈடுசெய்தல் ஆகிய இரண்டு விஷயங்களில் நாமும் இயற்கையைப் பாழ்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே, அவசரப்பட்டு நம்மைப் பற்றி நாமே பெருமையாக நினைத்துக்கொள்ள வேண்டாமே..!

 

நாம் நுகரும் ஒவ்வொரு பொருளுக்கும் சூழலியல் விலை உண்டு – இது பொதுவாக ‘சூழலியல் தடம்’ என்று அழைக்கப்படுவதுண்டு.
ஒரு பொருளுக்கு சூழல் அடிப்படையில் விலை மதிப்பு நிர்ணயம் செய்வதென்பது மிகவும் கடினம்.

நமது விருப்பங்கள் பலநேரங்களில் நமது தேவைகளை மீறிச் செல்கின்றன. குறிப்பாக, நம்மிடம் அதிக பணம் இருக்கும்போது நமது விருப்பங்கள் மேலேறி துருத்திக் கொண்டிருக்கின்றன.

“கடைசி மரம் வெட்டப்படுகையில், கடைசி மீனும் பிடிக்கப்படுகையில், கடைசியாக எஞ்சிய ஆறும் அசுத்தம் செய்யப்படுகையில், நாம் சுவாசிக்கும் காற்று நோயைத் தரும் அளவிற்கு மாசுபடுகையில், அப்போதுதான் நீங்கள் நிலைமையை உணர்வீர்கள்; ஆனால் அப்போது எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. செல்வம் என்பது வங்கிக் கணக்கில் வைக்கப்பட முடியாதது, ஏனெனில் உங்களால் பணத்தை உண்ண முடியாது” எனும் நீண்டக் கூற்றை நாம் சிலர் சொல்லக் கேட்டிருப்போம்.

இந்த இடத்தில், “கண்கெட்டப் பிறகா சூரிய நமஸ்காரம்?” என்ற பழையக் கூற்றையும் சற்று நினைவில் வைத்துக் கொள்வோம்.

(முற்றும்)

Categories:

Tags:

No responses yet

Share your thoughts

%d bloggers like this: