நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் புவியியல் (Geography) என்ற ஒரு அறிவியல் ஊடுருவியுள்ளது தெரியுமா…!

ஆனால், நாம் அதைப்பற்றி அதிகம் கண்டுகொள்ளாமலும், அலட்டிக் கொள்ளாமலும் இருக்கிறோம் அவ்வளவே. அந்த அறிவியல் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவியுள்ளது என்பதைத் தவிர்த்து, அதை நாம், நம் வாழ்வின் எல்லா நேரங்களிலும் பயன்படுத்துகிறோம் என்ற உண்மையையும் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. நம் வாழ்விலிருந்து புவியியலும் வரலாறும் எடுக்கப்பட்டுவிட்டால் அவ்வளவுதான்; அனைத்துமே தவறாகிவிடும்.

கற்கோளம் முதல் வசிப்பிடம் வரை…

நீங்கள் வாழும் வீட்டில் சில பல அறைகள் உள்ளன. ஆனால், நீங்கள் வசிக்கும் வீட்டைக் கட்டுவதற்கு முன்னதாக இருந்த சூழலை சற்று கற்பனை செய்து பாருங்களேன். தற்போது உங்கள் வசிப்பிடம் இருக்கும் இடம், முன்பு ஒரு பரந்த வெட்டவெளியாக இருந்திருக்கும். அந்த வெட்டவெளி யாரோ ஒரு நபருக்கோ அல்லது நபர்களுக்கோ உரிமையானதாக இருந்திருக்கும்.

படம் – சொ. பிரசன்ன பாரதி, 2019

சில காலம் கழித்து, அந்த பரந்த வெட்டவெளியின் ஒரு சிறு பகுதியை யாரோ ஒருவர் விலைக்கு வாங்குகிறார். பகுதி நிலங்களாக அந்தப் பரந்த கற்கோளம் (Lithosphere) விற்பனை செய்யப்படும்போது, அதற்கேற்ப எல்லைகளும் பிரிக்கப்படுகின்றன. வெட்டவெளிப் பரப்பானது, தனித்தனி துண்டு நிலங்களாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகிறது. விற்பனை தொடர்பாக சட்ட ஆவணங்கள் தயார்செய்யப்பட்டு, வரி செலுத்தப்பட்டு, அதற்கான விற்பனை தொகையும் உரியவரிடம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய நடைமுறைகளுக்குப் பிறகு, ஒரு உச்சபட்ச வெப்பமுடைய பாறைக்குழம்பின் (magma) மேல் சுற்றிக்கொண்டிருந்த கற்கோளத்தின் (Lithosphere) ஒரு சிறிய பகுதியானது, ஒரு தனிப்பட்ட மனிதரின் சொத்தாக மாற்றம் பெறுகிறது.

அந்த இடத்தில் ஒரு கட்டடம் நிர்மாணம் செய்யப்பட்டவுடன், அதற்கென ஒரு தனி முகவரி அடையாளமும் வந்துவிடுகிறது. உதாரணமாக ஒரு முகவரியை இங்கே நாம் பார்க்கலாம்,

எண்:36, மல்லிகை இல்லம்,
மூன்றாவது குறுக்குத் தெரு,
சங்கத்தமிழ் நகர்,
அரசரடி,
மதுரை – 625016
தமிழ்நாடு.

இந்த முகவரியில் பல்வேறான பாகங்கள் வருகின்றன. ஆனால், அந்த ஒவ்வொரு பாகமுமே, மனிதனால் புவிப்பரப்பின் மீது செயற்கையாக உருவாக்கப்பட்ட கோடுகளால் உருவானவையே ஒழிய, அவை இயற்கையானதல்ல. ஏனெனில், இயற்கைக்கென்று எந்தக் குறிப்பிட்ட குறுகிய எல்லையும் கிடையாது.

கற்கோளத்தின் (Lithosphere) ஒரு சிறிய துண்டுப் பரப்பை விலைகொடுத்து வாங்கிய உரிமையாளர், இல்லை…இல்லை… இந்த இடத்தில் அவரை நாம் ‘புதிய உரிமையாளர்’ என்று அழைத்தால்தான் சரியாக இருக்கும். சரி, அந்தப் புதிய உரிமையாளர், தான் வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்காக சில சம்பிரதாய சடங்குகளை மேற்கொண்டு, கட்டடம் கட்டுவதற்கான அடித்தளம் அமைப்பதற்கு குழி தோண்டுகிறார். பின்னர் சிறிதுசிறிதாக அங்கே ஒரு வீடு உருவாகிறது. எல்லையற்ற பரப்பாக விரிந்து கிடந்த கற்கோளத்தின் (Lithosphere) ஒரு சிறிய பகுதியில் தற்போது ஒரு அழகான வீடு எழுந்து நிற்கிறது…!

பாகங்கள் இதோடு மட்டும் முடியவில்லை. அந்த சிறிய வீட்டிற்குள்ளும் பல அறைகள் இருக்கின்றன. அந்த அறைகளும்கூட அனைத்துமே ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒரு அறை பெரிதாகவும், இன்னொரு அறை சிறிதாகவும் இருக்கிறது மற்றும் ஒன்றின் கதவு – ஜன்னல் அமைப்புகள் பெரிதாகவும், மற்றொன்று சிறிதாகவும் அமைகின்றன.

படம் – சொ. பிரசன்ன பாரதி, 2019

பொருட்கள் சரியான இடங்களில் நிர்மாணம் செய்யப்பட்டவுடன், பிளம்பிங் (தண்ணீர் குழாய் உள்ளிட்டவைகளை பதித்து அமைத்தல்), மின்சார இணைப்பு வேலைகள் (Electrical work), அலமாரிகள் அமைத்தல் (Carpentry work) உள்ளிட்ட பல்வேறான பணிகள் நடைபெறுகின்றன. ஒருவகையில் பார்த்தால், பல்வேறு அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு, மொத்தமாக ‘வீடு’ என்று அழைக்கப்படுகிறது.

‘வசிப்பிடம்’ மற்றும் ‘வீடு’…

எப்படி வீட்டைக் கட்டத் தொடங்கும்போது அதற்கென ஒரு தனி சடங்கு (ritual) செய்யப்படுகிறதோ, அதேப்போன்று வீட்டைக் கட்டிமுடித்து, அதில் குடியேறுவதற்கு முன்னதாகவும், ஒரு சம்பிரதாய சடங்கு நடத்தப்படுகிறது. புதுமனைப் புகுவிழா (House Warming function) என்று அழைக்கப்படும் அந்த நிகழ்விற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று பலர் அழைக்கப்படுகிறார்கள். அதற்கு வருகைதரும் விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள், பரிசுப் பொருட்கள் உட்பட பலவற்றை பரிசாக அளிக்கிறார்கள். இந்த நிகழ்வு நடத்தப்படுவதன் நோக்கமே, வேண்டப்பட்ட நபர்களை வரவழைத்து, அவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் புதிய வீட்டிற்காகப் பெற்று, அதில் தமது வாழ்வை இன்பமாக நகர்த்த வேண்டும் என்பதுதான்.

வீட்டைக் கட்டி முடித்த குடும்பத்தினர், வீட்டிற்குள் குடியேறுகிறார்கள்…! வீட்டின் சமையலறை உட்பட, படுக்கையறை, பூஜை அறை, குளியலறை போன்ற ஒவ்வொரு அறையும் அதுமுதல் இயங்கத் தொடங்குகிறது. அந்தப் புதிய இடத்துடன், புதிதாக குடியேறிய குடும்பத்தினரின் உறவு நாளுக்குநாள் வலுப்பட்டு மேம்படுகிறது. வீட்டின் அருகில் வசிக்கும் இதர மக்களுடன் பல்வேறான உறவு நிலைகள் கட்டமைக்கப்படுகின்றன. நட்பு, பிணக்கு, ஒத்துழைப்பு, விரிசல் உள்ளிட்ட பல்வேறான உறவுநிலைகள் பரிணமிக்கின்றன. இவை அனைத்துமே, ஒரு இடத்தில், ஒரு நேரத்தில் நடப்பவையாக, அதாவது, புவியியலிலும் வரலாற்றிலும் உள்ளடங்கிய சிறிய சம்பவங்களாக உள்ளன.

கற்கோளத்தின் (Lithosphere) மேல் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு சிறிய இடத்தில், வசிப்பதற்காக ஒரு கட்டடம் கட்டப்படுகிறது. பின்னர், அதில் நீங்கள் ஒரு குடும்பமாக குடியேறி, உங்கள் வாழ்க்கையை நடத்துகையில் அந்த வசிப்பிடமானது, இல்லமாக மாறுகிறது. உங்கள் இல்லத்தை, அனைத்துவகை தீங்கு மற்றும் இடைஞ்சல்களிலிருந்தும் பாதுகாக்க, நீங்கள் எத்தனிக்கிறீர்கள் (முயல்கிறீர்கள்). உங்கள் வீட்டின் முன்பாக யாரேனும் வந்து இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை நிறுத்தினாலோ அல்லது குப்பையைக் கொட்டினாலோ உங்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது.

உங்களிடம் யாரேனும் நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்று கேட்கையில், உங்கள் வீட்டை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். (ஆனால் சிலர், அதிக தத்துவார்த்த முறையில் அணுகுகிறார்கள். அவர்கள் உங்களிடம் ‘நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்’ என்று வினவுவார்கள். ஆனால், ‘தங்குதல்’ எனும் வார்த்தை தற்காலிகமாக ஓரிடத்தில் இருப்பதையேக் குறிக்கும். நீங்கள் ஒரு விடுதியில் தங்கலாம், ஆனால், வீட்டில்தான் வாழ முடியும்).

மிகப்பெரிய கற்கோளத்தின் (Lithosphere) ஒரு சிறிய இடத்தில் புதிதாக உங்களால் உருவாக்கப்பட்ட இல்லமானது, தற்போதைய நிலையில், உங்கள் குடும்பத்தினுடைய அனைத்துவகை செயல்பாடுகள் மற்றும் உணர்வுகளோடும் தொடர்புடைய ஒரு அம்சமாக மாறியிருக்கிறது. உங்கள் உணர்வெழுச்சிகள், உறவுநிலைகள், பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, துக்கம், கோபம் மற்றும் அன்பு ஆகிய அனைத்தினோடும், உங்களின் இல்லம் பின்னிப் பிணைந்து காட்சியளிக்கிறது.

உங்கள் இல்லத்தில், ஒவ்வொரு அறையும் எங்குள்ளது மற்றும் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு எப்படி செல்வது என்பது குடும்பத்தினர் அனைவரும் அறிந்ததே…! ஒவ்வொரு அறையிலும் எந்தமாதிரியான செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இருக்கிறதென்பதையும் குடும்ப உறுப்பினர்கள் அறிவார்கள். சமையலறையில் என்ன செய்ய வேண்டும் மற்றும் குளியலறையில் என்ன செய்யக்கூடாது என்பது போன்றதான விஷயங்களும் அனைவருக்கும் அத்துபடியாக இருக்கும்.

மிதியடிகள் எங்கே கழற்றிவிடப்பட வேண்டுமென்பது முதல் எத்தகையப் பொருட்களை வீட்டினுள்ளே கொண்டுவரக் கூடாது என்பது வரை, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கூறப்பட்டு, அவை விதிமுறையாக பின்பற்றப்படும். அந்த விதிமுறை மீறப்படும்போது கண்டிக்கப்படுகிறது.

அலமாரியின் எந்த அடுக்கு யாருக்கானது? யாருடைய வாகனத்தை எங்கே நிறுத்த வேண்டும்? போன்ற விதிமுறைகள் இல்லத்தில், குடும்ப உறுப்பினர்களுக்காக வரையறுக்கப்பட்டிருக்கும். அனைத்துமே ஒழுங்குமுறையுடன் அமைப்பாக்கப்பட்டுள்ளது. எனது இளைய தோழனே, இதுதான் புவியியலின் இயக்கம் என்பது…! ஆனால், இந்தப் புவியியல் உனக்கு சலிப்பூட்டுகிறது என்று நீ என்னிடம் சொன்னால், அடுத்ததாக, உனது வீட்டில் இருப்பதற்கே சலிப்பூட்டுகிறது என்று நீ என்னிடம் அலுத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு.

மன வரைபடம் (Mental Map)

வீட்டிற்கு வெளியே நீங்கள் வேறு இடங்களுக்குச் சென்று வரலாம். உதாரணமாக, நீங்கள் தினந்தோறும் உங்கள் சைக்கிளில் நீங்களாகவே பள்ளிக்குச் சென்று வருகிறீர்கள். அப்போது, உங்கள் இலக்கை அடையும் பொருட்டு, நீங்கள் எவ்வாறு வழியைப் பின்பற்றி செல்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.

படம் – சொ. பிரசன்ன பாரதி, 2019

உதாரணமாக பார்க்கையில், நீங்கள் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறீர்கள். தெரு முனையில் ஒரு ஏடிஎம் இருக்கிறது. அங்கே சைக்கிளை நிறுத்தி, இப்போது நான் வலதுபுறமாக திரும்ப வேண்டுமல்லவா..! என்றெல்லாம் நீங்கள் சொல்லிக்கொள்வதில்லை. உங்களின் கைகள், எந்த தடுமாற்றமும், தாமதமுமின்றியே சரியான திசையில் சைக்கிளைத் திருப்புகிறது. அதேபோன்று, உங்களின் வழியில், இளஞ்சிவப்பு நிறத்தில், களிப்பூட்டக்கூடிய கேக்குகள் அடுக்கப்பட்டிருக்கும் ஒரு பேக்கரியும் குறுக்கிடுகிறது. நீங்களோ, சற்றும் தடுமாறாமல் கேக்குகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே, எந்த சிரமமுமின்றி, உங்களின் பாதையில் இடப்புறமாக சைக்கிளைத் திருப்புகிறீர்கள். நீங்கள் எந்தவிதமான வெளிப்புற வழிகாட்டலையும் எதிர்பார்ப்பதில்லை. அப்படி நீங்கள் வெளிப்புற வழிகாட்டுதலைப் பெற்று செயல்பட்டால், அது கூகுள் வரைபடத்தில், ஒரு கணிப்பொறி பெண் குரலை கேட்டு நாம் வழி கண்டுபிடித்து செல்வதைப் போலல்லவா இருக்கும்…! ஆனால், இங்கே அனைத்தும் தன்னிச்சையாக நடக்கிறது..! இது எப்படி சாத்தியமாகிறது…!

உங்களில் ஒரு மன வரைபடம் இருக்கிறது; அதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அந்த மன வரைபடமானது, நீங்கள் அதைப்பற்றிய கவனம் கொண்டிருக்க வேண்டிய தேவையின்றியே, உங்களுக்கு வழிகாட்டுகிறது. அந்த வரைபடம் மிக விரைவாக தன்னைத்தானே அப்டேட் செய்துகொள்கிறது. இப்போது நீங்கள் எங்கோ ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செல்லும் வழியில் ஒரு குழி தோண்டப்பட்டிருக்கிறது (அதை தோண்டியவருக்கு ஒரு நன்றி சொல்லிக் கொள்ளலாம்), அடுத்ததாக, செல்லும் வழியில் மணலும், ஜல்லியும் கொட்டப்பட்டுள்ளது (அங்கே வீடு கட்டிக்கொண்டிருப்பவருக்கு ஒரு நன்றி சொல்லலாம்), மேலும் இன்னும் கொஞ்சதூரம் செல்கையில், வழியின் மீதாக ஒரு நாயின் கழிவு கிடக்கிறது (பொறுப்பற்ற அந்த நாயின் உரிமையாளருக்கு ஒரு நன்றி சொல்லிக் கொள்ளலாம்), இவைதவிர, வழியிலே ஒரு பெரிய மின்சார கடத்துக் கம்பி (wire) நீண்டு கிடக்கிறது (பரவாயில்லை, மின்சார வாரியத்திற்கும் ஒரு நன்றி சொல்லிக்கொள்ளலாம்).

இப்படி, வழியில் எவ்வளவு தடைகள் மற்றும் இடைஞ்சல்கள் இருப்பினும், நமது மன வரைபடத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவைப்படும் இடத்தில் உடனடியாக வழியை மாற்றி, வேறெந்த இரண்டாம் சிந்தனையுமின்றி, நாம் நம் பயணத்தைத் தொடரும் வகையில், இந்த மன வரைபட‍ம் நம்மை இயக்குகிறது.

கணக்கற்ற பல புவியியல் அம்சங்களிலிருந்து, உங்களின் அன்றாட வாழ்க்கைப் பணிகளை மேற்கொள்வதற்கு, உங்களுக்கு உதவக்கூடிய வெறுமனே சில அம்சங்கள்தான் இவை. இத்தகையப் புவியியல் அம்சங்களால், உங்கள் வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியானதாக மாறலாம் அல்லது மகிழ்ச்சியற்றதாகவும் இருக்கலாம்..! ஆனால், இந்தப் புவியியல் காரணிகளை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே முடியாது என்பதுதான் உண்மை.

மொழிபெயர்ப்பு – திரு. பிரசன்ன பாரதி, ரிலீஃப் ஃபவுண்டேஷன், சென்னை.

மூல ஆங்கில கட்டுரை – டா. சந்திரசேகர் பாலசந்திரன், நிறுவனர் மற்றும் இயக்குனர்,
த இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜியோகிராஃபிகல் ஸ்டடீஸ், பெங்களூரு.

Categories:

No responses yet

Share your thoughts

%d bloggers like this: