சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருச்சி பக்கமாக செல்லும் (சென்னையிலிருந்து தெற்கே 300 கி.மீ -க்கும் அதிகமான தொலைவில் உள்ளது திருச்சி) பேருந்தை தேடி நடந்து கொண்டிருந்தேன். கம்பம், பழனி, போடி, குமுளி, தேனி, வத்தலகுண்டு மற்றும் மதுரை என்று பல ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வரிசையாக நின்றன.

நடத்துனர்கள் பேருந்துகளின் முன்பாக நின்று கத்திக்கொண்டே இருந்தார்கள். விட்டால் கையைப் பிடித்து இழுத்து பேருந்தினுள்ளேயே ஏற்றிவிடுவார்கள் போலும். எச்சரிக்கையுடன் சற்று தள்ளியே நடந்தேன். சாதாரண வார நாட்களில் வெளியூர் செல்லும் பேருந்துகளின் இருக்கைகள் பாதியளவு நிரம்புவதே கடினம் என்பதால்தான் நடத்துனர்கள் இப்படி அதீத ஆர்வத்துடன் நடந்துகொள்கிறார்கள்.

சரி, பழனி செல்லும் பேருந்தே பரவாயில்லை; நன்றாக இருக்கிறது என்று எண்ணி, அதில் ஏறிக்கொண்டேன். நான் இறங்க வேண்டியது திண்டுக்கல்தானே..! சென்னைக்கு தென்மேற்கே ஏறத்தாழ 420 கி.மீ தொலைவில் உள்ளது திண்டுக்கல். இந்த ஊர் சில விஷயங்களுக்குப் பிரபலம். ‘அதிகம் பேசினால் உன் வாய்க்குப் பூட்டுப்போட்டு விடுவேன்’ என்கிறார்களே, அந்தப் பூட்டுக்கு இந்த ஊர் ஃபேமஸ்.

இந்த திண்டுக்கல் மாவட்டம் கடந்த 1985ம் ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக ஒருகாலத்தில் இருந்த மதுரை மாவட்டம் பலமுறை துண்டாடப்பட்டுவிட்டது.

பேருந்தில் தூக்கமே வரவில்லை. ஒழுங்காக 2 மணிநேரம்கூட தூங்கவில்லை. திருச்சி வந்தபிறகு, அங்கிருந்து திண்டுக்கல் சென்றுசேரும் அடுத்த 2 மணிநேரங்களும் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டேதான் வந்தேன். ஒருவழியாக அதிகாலை 5 மணிக்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கினேன்.

சரி, நான் போவது எந்த ஊருக்கு? என்றுதானே கேட்கிறீர்கள்..! பொறுமை…பொறுமை… சொல்கிறேன். தமிழகத்தின் தென்மேற்குப் பகுதியில் உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்த அழகான தேனி மாவட்டத்தில் ஒரு ஊருக்குச் செல்கிறேன். (இந்த தேனி மாவட்டம் 1996ம் ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதுவும் மதுரை மாவட்டத்தின் குழந்தைதான். மதுரை மாவட்டத்திற்கு பேரக் குழந்தைகளும்கூட இருக்கின்றன. என்னது மதுரை மாவட்டத்திற்கு பேரக் குழந்தைகளா..! என்கிறீர்களா?

மேற்கு தொடர்ச்சி மலை (நன்றி: Google)

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கடந்த 1910ம் ஆண்டு, மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது ராமநாதபுரம் மாவட்டம். அந்த ராமநாதபுரம் மாவட்டம் 1985ம் ஆண்டு பெற்ற குழந்தைகள்தான் சிவகங்கை மாவட்டமும் விருதுநகர் மாவட்டமும். அப்படியெனில், விருதுநகர் மாவட்டமும் சிவகங்கை மாவட்டமும் மதுரை மாவட்டத்தின் பேரக்குழந்தைகள்தானே..! இந்தப் பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் தாய் மாவட்டத்திற்கும், பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் நெருங்கிய ரத்த சொந்தம் தெரியுமா..! அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்),

அந்த தேனி மாவட்டத்தில் பெரியகுளம் என்ற நகராட்சியின் அருகே, தென்கிழக்கு திசையில் கிட்டத்தட்ட 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேல்மங்களம் என்ற கிராமம். இது சற்று பெரிய கிராமம்தான். இங்கிருந்து புகழ்பெற்ற வைகை அணை வெறும் 10 கி.மீ தான்.

திண்டுக்கல்லில் இருந்து கம்பம் பேருந்தைப் பிடித்து, பெரியகுளம் இறங்கி, அங்கிருந்து ஆண்டிபட்டி செல்லும் பேருந்தைப் பிடித்து, வடுகபட்டி என்ற ஊரைத் தாண்டி (இந்த ஊர் இந்தியாவின் மிக முக்கியமான வெள்ளைப்பூண்டு சந்தை)மேல்மங்களத்தில் இறங்கி என் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். மணி சரியாக 7 ஆகியிருந்தது. அடுத்த 5 நிமிடத்திற்குள் நான் செல்ல வேண்டிய அக்ரஹாரம் 4வது தெருவிற்கு சென்றுவிட்டேன். அங்கே, ‘லாலி ராஜம் ஃபவுண்டேஷன்’ மையத்தைக் கண்டுபிடிப்பது பெரிய கஷ்டமெல்லாம் கிடையாது. அது ஒரு சின்ன தெருதான்.

காலை 10.30 மணிக்கெல்லாம் 20 மாணவர்களுக்கு மேல் வந்துவிட்டார்கள் அந்த மையத்திற்கு. எதற்காக? அவர்கள் புவியியலைப் பற்றி அறிந்துகொள்ள வந்துள்ளார்களாம்..! அவர்கள் அனைவரும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிப்பவர்கள். புவியியலா? அதுதான் அவர்களுடைய பாடங்களிலேயே படிக்கிறார்களே..! இப்போது என்ன தனியாக தெரிந்துகொள்ள வந்துள்ளார்கள் என்று சிலர் கேட்டார்கள்.

‘பாடங்களின் மூலம் தெரிந்துகொள்ள முடியாததை, அதாவது நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் புவியியல் கலந்துள்ளது என்று இதுவரை உணரமுடியாததை இனிமேல் உணர்வதற்காகவே இங்கே வந்துள்ளார்கள்’ என்பதே அவர்களுக்கான பதில்..!

“காலியாக வெறுமையாக பூமியின் மேற்பரப்பில் பரந்துகிடக்கும் ஒரு கட்டாந்தரை (கற்கோளம்), எப்படி ஒரு ஊராக மாறி, அந்த ஊர் எப்படி பல பகுதிகளாக மாறி, ஒவ்வொரு பகுதியும் எப்படி பல தெருக்களாக மாறி, தெருக்கள் எப்படி பல வீடுகளாக மாறி, அந்த வீடுகள் எப்படி பல அறைகளாக மாறி, இவை அனைத்திற்கும் பல பெயர்களும் சூட்டப்பட்டு, நாம் அவற்றின் ஒரு பகுதியாக திகழ்ந்து வருவது” குறித்து விளக்கியதே நமது புவியியல் விழிப்புணர்வு வகுப்பின் முதல் கட்டமாக இருந்தது.

“யாருக்குமே சொந்தமில்லாத அந்தக் கட்டாந்தரையை இப்படியாக ‘என்னது உன்னது’ என்று சொந்தம் கொண்டாடி, மூளையில் தெளிவாகப் பதிந்துள்ள மன வரைபடம் மிகவிரைவாக வேலை செய்வதன் பொருட்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு எளிதாக நகர்ந்துகொண்டு, வாழ்க்கையை ஓட்டித்திரிவதே இதன் உள்ளார்ந்த பொருள்”.

இரண்டாவது பாகத்தில்

“நாம் வாழும் உலகமானது நதிகள், கடல்கள், சமவெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், காடுகள், பீடபூமிகள் என்று பலவிதமாகப் பிரிந்து காட்சித் தந்தாலும், அவைகளின் முற்கால அமைப்பு வேறு. இன்று பாலைவனமாக இருக்கும் ஒரு பிரதேசம் ஒருகாலத்தில் கடலாக இருந்திருக்கும். இன்று கடலாக இருக்கும் ஒரு பகுதி, ஒருகாலத்தில் மலையாக இருந்திருக்கும். இன்று தனித்தனியாக இருக்கும் கண்டங்கள், சிலகோடி ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்றாக இருந்தவையே. அவற்றுக்கிடையிலான உறவுகள், உடன்பிறந்த ரத்த உறவுகள் போன்றது. ஒன்றின் இருப்பிற்கு இன்னொன்று உதவி செய்யும்.

எனவே, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் எப்போதும் நினைத்துவிடக்கூடாது. அப்படி நினைத்தால் நமக்கும் இந்த பூமிக்கும் சம்பந்தமில்லாமல் போய்விடும்” என்று நான் விளக்கியபோது மாணாக்கர்களுக்கோ ஒருபுறம் ஆச்சர்யம் மற்றும் இன்னொருபுறம் குழப்பம்..! அது எப்புடி சார்? என்ற கேள்விகள்…

நான்: ஆஃப்ரிக்கா மற்றும் தென்அமெரிக்கா இந்த ரெண்டும் என்ன?

மாணாக்கர்: அவை ரெண்டும் வெவ்வேறு கண்டங்கள்.

ஆஃப்ரிக்கா & தென் அமெரிக்கா (நன்றி: Google)

நான்: சரி, கரெக்ட்! இன்னைக்கு அவை ரெண்டும் வெவ்வேறு கண்டங்கள். ஆனா, சில கோடி ஆண்டுகளுக்கு முன்னால, அவை ரெண்டுமே ஒன்னா இருந்தவை. ஆஃப்ரிக்க கண்டத்தின் வடபகுதியில் பரந்துவிரிந்திருக்கும் உலகத்தோட மிகப்பெரிய பாலைவனமான சஹாரா, ஒருகாலத்தில் கடலா இருந்துச்சி.

மாணாக்கர்: என்னது கடல் பாலைவனமா மாறிடுச்சா..!?

நான்: ஆமா; நான் முன்னமே சொன்னனே, இயற்கையோட அதிசயங்கள் இன்னும் பல இருக்கு. நாம புரிஞ்சிக்கிட்டது ரொம்பவும் கொஞ்சம்..! இந்த சஹாரா பாலைவனம்தான், தன்னோட கண்டத்துல இருந்து பிரிஞ்சி, தனிக்குடித்தனம் நடத்தப்போன தென்அமெரிக்கா கண்டத்துல இருக்கிற மிக அற்புதமான பெரிய அமேசான் மழைக்காடுகள் நீடிச்சி வாழ பெரிய அடிப்படை ஆதாரமா இருக்கு தெரியுமா?

மாணாக்கர்: என்ன சார் இப்புடிப் போட்டு குழப்புறீங்க..! தண்ணியே இல்லாத ஒரு வறட்டுப் பாலைவனம், எப்புடி உலகத்தோட மிக அற்புதமான நீராதாரம் உள்ள பெரிய அமேசான் மழைக்காடுகளுக்கு உதவ முடியும்? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறதைவிட இது கொடுமையா இருக்கே..!

நான்: டோன்ட் வொர்ரி…மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மட்டுமல்ல, பூமியோட இயக்க நுட்பங்களை அறிந்தால், சொட்டைத் தலைக்கும் கணுக்காலுக்கும்கூட முடிச்சுப் போடலாம். அந்தளவுக்கு அதிசயங்களும் ஆச்சர்யங்களும் குவிஞ்சிக் கிடக்குது..!

கம்ப்யூட்டர்லயோ, லேப்டாப்புலயோ அல்லது மொபைல் ஃபோன்லயோ, இண்டர்நெட் கனெக்ஷன் இருந்தாப் போதும். http://www.tigs.in அப்டீங்கிற வெப்சைட் போங்க. அந்த வெப்சைட் ஒரு புவியியல் கலைக்களஞ்சியம்..! அதுல பல மொழிகள்ல புவியியல் கட்டுரைகளைப் படிக்கலாம். நம்ம தமிழும் இருக்கு! அந்த வெப்சைட்டுல போனா, அமேசான் – சஹாரா இரண்டுக்கும் இடையிலான அதிசய தொடர்பு பத்தின கட்டுரையைப் படிக்கலாம். அப்புறம் எல்லாரும் நல்லா தெரிஞ்சுக்கலாம்; பாலைவனம் எப்புடி மழைக் காடுகள் வாழ்வதற்கு உதவுதுங்கிறதை..!

மாணாக்கர்: நிச்சயமா இனிமே அந்த வெப்சைட்டை தொடர்ந்து படிப்போம் சார். ஆனா, பாருங்க சார், புவியியல் என்ற துறையே ஒரு பரபரப்பான சுவாரஸ்யமான திகில் படம் பார்க்கிற மாதிரி இருக்கு..! ஆனால், நாங்க இதுவரைக்கும் புவியியலை ஒரு போர் அடிக்கிற அழுகாச்சிப் படமாகத்தான் பாத்துருக்கோம்.

நான்: அது உங்க தப்பு இல்லப்பா..!

புவியியல் விழிப்புணர்வு வகுப்பை முடித்துவிட்டு, மறுபடியும் வடகிழக்கே 500 கி.மீ. பயணம் செய்து, சென்னை மாநகரைத் தாண்டி, நான் எனது இடத்திற்கு வந்துவிட்டேன். எனக்காக அந்த மாணவர்கள் காத்திருக்கிறார்கள் மீண்டும் எப்போது வருவேன் என்று.

அடுத்த மாதம் அங்கே மீண்டும் செல்வேன். அவர்களோடு சேர்ந்து நானும் சுவாரஸ்யமான பரபரப்பான திகில் படம் பார்ப்பேன்.

அதுதான் புவியியல்..!

எழுதியவர்: சொ.பிரசன்ன பாரதி

Categories:

Tags:

No responses yet

Share your thoughts

%d bloggers like this: