என்ன இது? தலைப்பே  ஒருமாதிரி இருக்கிறதே என்கிறீர்களா?

புவியியல் சரி. அதனோடு என்ன மதம்?

மதம் சரி, அதனோடு என்ன புவியியல்?

இந்த உலகில் உள்ள அனைத்து அம்சங்களுமே புவியியலோடு தொடர்புடையது எனும்போது, மதம் மட்டும் தனித்துப் போய்விடுமா என்ன? மதங்கள் மற்றும் அவற்றின் புவியியல்கள் குறித்து அலசுவதே இந்தக் கட்டுரை. அந்த அலசல் நமக்கெல்லாம் பெரும் ஆர்வமூட்டக்கூடியது. ஏனெனில், நம்மில் மிகப் பெரும்பாலானோர்  மதங்களுடன் பிணைக்கப்பட்டவர்களே!

மதம் சார்ந்த புவியியல் என்பது பண்பாட்டு புவியியலின் ஒரு முக்கிய அங்கம். அதாவது, பண்பாட்டுடன் தொடர்புடைய புவியியலே பண்பாட்டு புவியியல் எனப்படுகிறது. மனித இனம் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மதங்களுடன் தொடர்புடையதாய் இருந்து வருகிறது. பிரபஞ்சம், கடவுள் மற்றும் அனைத்திற்கும் மேலான சக்தி அல்லது வேறு எந்த பெயர்களில் அழைக்கப்பட்டாலும்கூட, அத்தகைய எளிதில் விளங்காத அம்சங்களுடன் மனிதர்கள் தொடர்பு கொள்வதற்கு உதவக்கூடிய அம்சமாக இருக்கிறது இந்த மதம்! மனித முயற்சியின் ஒரு பெரும்பகுதியாக இருக்கிறது இது.

மதங்களின் புவியியல், பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. நாம் அவற்றில் சிலவற்றைப் பற்றிய அறிமுகங்களைப் பெறுவோம்

தோற்றம்

பொதுவாக, மதங்கள் ‘மக்கள் இனம்’ சார்ந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன.  முந்தையப் பத்தியில், நான் ‘மக்கள் இனம்’ என்ற வார்த்தையை, புவியியல் ரீதியாக பயன்படுத்தியிருப்பேன். ஏனெனில், ஒவ்வொரு இனமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அவ்விடத்தின் தன்மைக்கேற்ப வாழ்ந்து வருவதால் நான் அந்த வார்த்தைக் குறியீட்டை பயன்படுத்தியிருப்பேன். எனவே, அந்த இடத்தில் உருவாகும் ஒரு மதமோ  அல்லது வேறு ஒன்றோ, அப்பகுதியின் தன்மைகளுடன், குறிப்பாக புவியியல் அம்சங்களுடன் ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கும். உதாரணமாக, தாவரங்கள் என்று எடுத்துக்கொண்டால், சில தாவரங்களின் மீது புனித அம்சங்கள் ஏற்றப்பட்டு, அவை வழிபாடுகளுக்கு பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும். (நம் பகுதியை எடுத்துக்கொண்டால், துளசி, தேங்காய், பேரிக்காய், வாழைப்பழம், பொட்டுக்கடலை, வாழை இலை மற்றும் மஞ்சள் போன்றவை வழிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவை). விலங்குகளை எடுத்துக்கொண்டாலும், அவற்றில் சில, வழிபாட்டு முக்கியத்துவம் கொண்டவையே. (நம் பகுதியில் பார்த்தால், யானை, பசு, எருது, எருமை போன்றவை, சமய சடங்குகளில் பெறுகின்ற முக்கியத்துவத்தை நாம் காண்கிறோம். இந்து தெய்வங்களுக்கு மூஞ்சூறு, மயில் உள்ளிட்ட சில விலங்குகளும், பறவைகளும் வாகனங்களாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம்). மேலும் இவைதவிர, மலைகள், குன்றுகள், ஆறுகள் மற்றும் குகைகள் போன்றவையும்கூட ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக திகழ்கின்றன என்பதும் நாம் அறிந்ததே. இதுமட்டுமா, புனித தாவர தொகுப்புகள், வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டடங்கள், இடுகாடுகள் மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவையும் இப்பட்டியலில் அடக்கம்.

கேரள மாநிலத்தின் கண்ணூருக்கு அருகிலுள்ள புனித ஆலமரம் (கன்ஹிரதரா சிரக்கல் – Kanhirathara Chirakkal) நம் நினைவுக்கு வரும்தானே!

கேரளத்தில் கண்ணுறுக்கு அருகில் கான்ஹிராதர சிறக்கலில் இருக்கும் புனிதமான ஆலமரம் (ஆதாரவளம்: Dexsolutions http://bit.ly/2hYwT1s)

தெய்வ நம்பிக்கைகள் மட்டுமல்ல, பேய்கள் தொடர்பான நம்பிக்கைகள்கூட, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா? ஆச்சர்யப்படாதீர்கள்! பேய் நம்பிக்கைகள் மட்டும் எங்கிருந்தோவந்துவிடவில்லை. அவையும், இங்கிருந்துதான் உருவாகின்றன. ஒரேயொரு உதாரணத்தை மட்டும் நான் இங்கே சொல்கிறேன். நமது தமிழ்நாட்டுப் பகுதியில், பேய்கள் என்றால், வெள்ளைச் சேலை கட்டிக்கொண்டு அல்லது வெள்ளை நிறத்துடன் ‘சலங் சலங்’ என்ற கொலுசு சத்தத்துடன் வீட்டை வலம் வரும் அல்லது காடு உள்ளிட்ட ஒதுக்குப்புறங்களில் நடமாடும் என்பதே நாம் உருவாக்கி வைத்துள்ள கற்பிதம். ஆனால், இதே பேய் கற்பிதம், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வேறு. அங்கே, பேய் என்பது காட்டுப் பன்றியின் வடிவில் நடமாடக் கூடியது! காட்டுப் பன்றியே பேய்க்கான வடிவம் அங்கே!

இந்த இடத்தில் மார்க்கோபோலோ என்கிற ஒரு புகழ்பெற்ற இத்தாலிய வரலாற்றுப் பயணியின் குறிப்பும் எனக்கு நினைவில் வருகிறது. அதையும் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்நாட்டின் பாண்டிய நாட்டிற்கு வருகைபுரிந்த அந்தப் பயணி, தென்பாண்டி மக்களின் வாழ்க்கை முறை குறித்து ஒரு சுவாரஸ்யமான குறிப்பை எழுதி வைத்துள்ளார். இதோ  அந்தக் குறிப்பின் ஒரு சிறுபகுதி.

“நல்ல கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த மக்கள், உலகின் வெள்ளை நிறத்தில் இருக்கும் பல இன மக்களைக் காட்டிலும் நிறைந்த நாகரீகமுடையவர்களாய் இருக்கிறார்கள். இந்த மக்களின் தெய்வங்கள் கருப்பு நிறத்திலும், இவர்களின் பேய்கள் வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன. என்னே, ஒரு வித்தியாசமான முரண்பாடு!”

பொதுவாக, மனிதர்கள் யாருமே எப்போதுமே நீண்டகாலத்திற்கு தனித்திருக்க விரும்புவதேயில்லை. சில விதிவிலக்குகள் உண்டுதான், ஒப்புக்கொள்கிறேன்; விதிவிலக்கு இல்லாத விஷயம்தான் இந்த உலகில் ஏது? மனித சமூகங்கள், காலத்திற்கு காலம் அல்லது தேவைக்கேற்ப இடம்பெயர்ந்து சென்று, பிற சமூகங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. அப்படி இடம்பெயரும் சமூக குழுக்கள், தம்முடன் தமது மதங்களையும் எடுத்துச் செல்கின்றன. அவ்வாறு பரவுகையில், சூழலியல் தோடர்புகளின் சிறப்பான விவரணங்கள் சற்று குறையலாம், ஆனால் அதேசமயம் பெரிய அடையாளத் தொகுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகின்றன.

ஏன்? ஏனெனில், ஒரு மதம் வேறொரு புதிய இடத்தில் பரவுகையில், அந்தப் புதிய இடத்தின் தன்மைகள் , அம்மதம் தோன்றிய இடத்தினுடைய தன்மைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும். அதுதான் காரணம்

பரவல்

மக்கள் பரவலாக இடம்பெயர்ந்து, அவர்களுடைய எண்ணங்களும் அவர்களுடனேயே பயணிப்பதால், உள்ளூரில் இருக்கும் மதங்கள், வெளியிலிருந்து வரும் மதங்களின் அம்சங்கள் பலவற்றை தன்னகத்தே உள்ளிழுத்துக் கொள்கின்றன. இதன்மூலமாக, வெளியிலிருந்து வரும் மதமும், உள்ளூர் மதமும் பல மாற்றங்களை சந்திக்கின்றன. ஏனெனில், ஒரு மனிதக் குழுவின் வாழ்க்கை முறைக்கு தக்கவாறே மதம் என்பது கருக் கொள்கிறது. அந்தவகையில், வாழ்க்கை முறையில் மாற்றங்களை சந்திக்கும் மதங்கள், அதற்கேற்ப தம்மையும் மாற்றிக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது.

தென்அமெரிக்க கண்டத்திலுள்ள பெரு(Peru) என்ற நாட்டில் அமைந்த ஆண்டிஸ் மலைப் பகுதியில் (லத்தீன் அமெரிக்கா – Latin America), கத்தோலிக்க கிறிஸ்தவ மதமானது, பண்டைய சடங்குகள் மற்றும் கொண்டாட்ட வழிமுறைகளுடன் (கிறிஸ்துவத்திற்கு முந்தைய) அனுசரிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. ஹைட்டிப் (Haiti) பகுதியைப் பொறுத்தவரை, அங்கே கத்தோலிக்க கிறிஸ்தவமும், உள்ளூர் மதமான வூடூயிஸமும் ஒன்றுக்கொன்று இயைந்து பின்பற்றப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, கிறிஸ்தவம், பெளத்தம், இஸ்லாம், இந்து, ஜைனம் மற்றும் பிற மதங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து இருப்பதுடன், அவற்றின் பல்வேறான அம்சங்கள், ஒன்றுடன் ஒன்று கலந்தும் வழக்கத்தில் உள்ளன.

எத்தகைய வடிவங்களிலேனும், மதங்கள் பரவிக்கொண்டுள்ளன.

உள்ளூர் சூழலை உள்வாங்குதல்

இந்நாட்களில் மேம்பட்டுள்ள உணவுப் பதப்படுத்தல் (Food processing) மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு (Transport technology) நன்றி சொல்ல வேண்டியுள்ளது. உள்ளூர் வயப்பட்ட சமய சடங்குகளின் பகுதியாக இருந்த உள்ளூர் புவியியல் அம்சங்கள், இப்போது உலகின் தொலைதூர பகுதிகளில், மிகவும் வேறுபட்ட புவியியல் சூழல்களுக்கு பரவ முடிகிறது. இவ்வாறாக, மதுரையிலும், திருப்பதியிலும் கடவுளுக்கு படையல் வைக்கவோ அல்லது பூஜையிலோ  பயன்படும் ‘தென்னிந்தியப் புகழ்’ தேங்காய், அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania), பிட்ஸ்பர்க்கிலுள்ள (Pittsburgh) பாலாஜி கோயிலிலும், டெக்சாஸ் (Texas) மாகாணத்தின் பியர்லேண்டிலுள்ள (Pearland) மீனாட்சி கோயிலிலும் இதேமுறையில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான சமய மற்றும் வழிபாட்டு சடங்குகளில், இதுபோன்ற படையல் முறை ஒரு பகுதியாக உள்ளது. அந்த சடங்குமுறைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

 

இந்து கோயில், சிக்காகோ (Chicago), அமெரிக்கா

பிறை நாள்காட்டியின்படி (Calendar), பல முக்கிய பண்டிகை நாட்கள் சில குறிப்பிட்ட நாட்களில் கொண்டாடப்படுகின்றன. உதாரணம்: ரம்ஜான், ஈஸ்டர், தீபாவளி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்றவை. ஆனால், இந்த கொண்டாட்ட தேதிகள், கிரகோரியன் நாள்காட்டி (Gregorian calendar) என்று அழைக்கப்படுகிற சூரிய நாள்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் வேறுபடுகிறது. இந்த நாள்காட்டியே, இன்றைய உலகில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. உங்கள் பள்ளியின் நாள்காட்டி கிரகோரியன் நாள்காட்டிதான். இந்தியாவில், பள்ளிகள் (மற்றும் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை) மேற்கண்ட விசேஷ நாட்களுக்காக, அவை எந்த நாட்களில் வருகிறதோ, அந்த நாட்களில் மூடப்படுகின்றன. அவர்களும் அந்த விசேஷ நாட்களைக் கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பிறை நாள்காட்டியைப் பின்பற்றும் மதங்கள் (இந்து மற்றும் இஸ்லாம் போன்றவை) சிறுபான்மை மதங்களாகும். எனவே, இம்மதங்களைப் பின்பற்றும் மக்கள், தங்களுடைய பண்டிகைகளை அனுசரிக்கும் நாட்களில் சமரசம் செய்துகொண்டு, அவற்றை மிக அருகிலுள்ள வார இறுதிநாட்களில் கொண்டாடுகிறார்கள். இதன்மூலமாக, பண்டிகை கொண்டாட்டம் தங்களுடைய நெருக்கடியான வேலை சூழலை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற சமரசம் செய்துகொள்ளப்பட்ட பண்டிகை கொண்டாட்டங்களில், நான் அமெரிக்காவில் இருந்தபோது, எனக்கு வசதியான தேதிகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் உண்டு.

வழிபாட்டு தலங்கள்

ஒவ்வொரு மதமும், வெவ்வேறு விதமான வழிபாட்டுக் கட்டுமானங்களை தமது அடையாளங்களாகக் கொண்டுள்ளன. அதன்படி, அவை தமக்கான வழிபாட்டு ஆலயங்களை கட்டமைத்துக் கொள்கின்றன. (இஸ்லாமிய வழிபாட்டிடங்கள் பொதுவாக ‘சராசனிக்’ கட்டடக்கலை பாணியிலும், கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் பொதுவாக ‘கோதிக்’ கட்டடக்கலை பாணியிலும் அமைந்திருக்கும்). இத்தகையப் பல்வேறு வகைப்பட்ட வழிபாட்டு ஆலயங்களை இந்த இந்திய நாட்டில், நாம் வாழும் இடங்களில் சாதாரணமாக காணலாம். ஏனெனில் இந்நாடு, பல்வேறு தேசிய இனங்களையும், சமயக் கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு. இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள், தர்காக்கள், குகைகள், ஆலமரம் மற்றும் அரசமரம் உள்ளிட்ட தாவரங்கள் போன்ற பல்வேறு வகைப்பட்ட சமய சின்னங்கள் நமக்கு சாட்சியங்களாய் உள்ளன.

பெங்களூருவிலுள்ள ஹஸ்ரத் தாவாக்கல் தர்கா. (ஆதார வளம்: http://bit.ly/2hYvRm8)

இத்தகைய தனித்துவம் வாய்ந்த வழிபாட்டு தலங்களை கட்டுவிப்பது எல்லா நாடுகளிலும், எல்லா நேரங்களிலும் சாத்தியமாகிவிடுவதில்லை. உதாரணத்திற்கு, அமெரிக்காவின் பல பகுதிகளில், இஸ்லாமிய மற்றும் இந்து சமூகத்தவர்கள், தங்களுக்கான தனித்துவ வழிபாட்டு ஆலயங்களை கட்டிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். ஏனெனில், அவர்கள் அப்பகுதிகளில் ஒரு மதிப்பிடத்தக்க பெரிய மக்கள்தொகையினராக வாழாத காரணத்தால், அவர்களுக்கென்று தனி வழிபாட்டிடம் கட்டிக்கொள்வதற்கு, உள்ளூர் சட்ட விதிகளின்படி அனுமதி கிடைப்பதில்லை. எனவே, இத்தகைய இக்கட்டான நேரங்களில் அவர்களுக்கு கைகொடுப்பது எதுவெனில், பழைய கிறிஸ்தவ தேவாலயங்களின் கட்டடங்கள்தான். அதாவது, வெளியே பார்ப்பதற்கு அவை தேவாலயங்களாக காட்சியளிக்கும். ஆனால், உள்ளே நடக்கும் வழிபாட்டு விஷயங்களோ வேறானவை. (இதைக் கேட்பதற்கு உண்மையிலே‍யே உங்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் ஏற்பட்டால், அதில் நான் ஆச்சர்யம் அடைவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அங்குள்ள உண்மை நிலை அதுதான்.)

பொருளாதார நடவடிக்கைகள்

புவியியலில், மதம் சார்ந்த மற்றும் மதம் சாராத நடவடிக்கைகள் ஆகிய இரண்டையும் ஒன்றுக்கொன்று இயைந்த (co-exist) அம்சங்களாய் நாம் அங்கீகரிக்கிறோம். ஏனெனில், இவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டவையாக இருப்பதால் நாம் அவற்றை பெரிதாக பொருட்படுத்துவதில்லை, அப்படித்தானே! எனவே, நீங்கள் ஆன்மீகம் தொடர்பான இடங்களுக்குச் செல்லும்போது, அங்கே பலவிதமான பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைக் காண்பீர்கள். (ஒரு வழிபாட்டு இடத்திற்கு செல்லும் வழிநெடுகிலும், இருபக்கங்களிலும் பல்வேறான கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடப்பதை கட்டாயம் நம்மில் அனைவருமே பார்த்திருப்போம். அந்த வியாபார நடவடிக்கைகளில் பல எளிய மக்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள். பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் விசேட பூக்கள், தாவரங்கள், காய்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றோடு, விவசாயிகளின் வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது.) ஒருவரின் வழிபாட்டுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அவருக்கு தேவைப்படும் உணவு, தங்குமிடம், தேவையான பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் பணம் கொடுத்தால் கிடைக்கப்பெறுகிறது. மதமும் பொருளாதார நடவடிக்கைகளும் சேரும் பல்வேறு நிலைகளில் இதுவும் ஒன்றாகும். இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டுமானால், மதம் என்று ஒரு வடிவமே, பொருளாதாரத்தின் உதவியுடன்தான் அடையப்பெறுகிறது.

மதங்கள் பல்வேறு இடங்களுக்குப் பரவுகையில், அந்தப் புதிய இடங்களில் வழக்கத்தில் உள்ள இயற்கை சூழல்கள் மற்றும் பொருளாதார சுழற்சிகள் போன்றவைகளை சந்தித்து எதிர்கொள்ள நேரிடுகிறது. உதாரணமாக பார்த்தால், மேற்காசியாவின் பாலைநிலத்தில் தோன்றி, அங்குள்ள பண்பாட்டு மற்றும் வாழ்வியல் கூறுகளை உள்வாங்கிய இஸ்லாம், காலப்போக்கில் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பரவியது. ஆனால், அங்குள்ள சூழலோ, அரேபியாவுடன் ஒப்பிடும்போது மிகவும் வேறுபட்டது. மழைக்காடுகளும், ஈரப்பதமான காற்றும், சிறுகுறு வேளாண் அமைப்புகளும் தென்கிழக்காசியாவின் புவியியல் அம்சங்கள். இத்தகையப் பெரிய வேறுபாடுகளை இஸ்லாமிய மதம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சிறுகுறு வேளாண் அமைப்பு என்பது, சிறுசிறு பகுதிகளில் வேளாண்மை செய்யப்பட்டு, தொடர்புடைய குறிப்பிட்ட குடும்பங்களின் உணவுத் தேவையை ஈடுசெய்வதாகும். இத்தகைய வேளாண் நடவடிக்கை என்பது முற்றிலும் இயற்கை சார்ந்த ஒன்றாகும். இந்த விவசாய முறையில், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், இத்தகைய விவசாயத்தில் இயந்திர சாதனங்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், வேளாண்மை நடைபெறும் இடமே மிகவும் சிறியதல்லவா! இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பெரிய பரப்பில் ஒரேவிதமான பயிர் விளைவிக்கப்படுவதைப் போலன்றி, இங்கே பலவிதமான பயிர்கள் சிறிய சிறிய இடங்களில்(கலப்புமுறை விவசாயம் – Integrated Farming) பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

தென்கிழக்காசிய மக்களின் வாழ்க்கைமுறை இவ்வாறு இருந்திருக்க, ரம்ஜான் பண்டிகையானது அவர்களின் தீவிரமான மற்றும் நெருக்கடியான வேளாண் நடவடிக்கை காலகட்டங்களின்போது வந்ததால், அவர்களுடைய மதத்தின் மிக முக்கிய அம்சமான நோன்பு நோற்பது, அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. எனவே, அந்த விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளுதல் என்பது சூழலின் கட்டாயத் தேவையாக இருந்தது. (அவர்கள் எவ்வாறு சமரசம் செய்துகொண்டார்கள்?)

இதைப்போலவே, தமிழகத்தின் சிறுகுறு விவசாயப் பாரம்பரிய பின்னணியிலிருந்து, பெரிய நகரப் பகுதிக்கு குடிபெயரும் ஒருவர், அங்கே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் முறையோடு ஒத்துப்போக வேண்டியுள்ளது. தமிழ்நாட்டிற்குள் மட்டுமல்ல; நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அங்குள்ள பழக்கவழக்கத்தோடு ஒத்துப்போய்தான் ஆக வேண்டும். நான் அமெரிக்காவில் இருந்தபோது, அங்கே பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டம் என்பது ஒரு பெரிய குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்ததில்லை. (அப்படி இருந்திருக்க முடியும் என நீங்கள் நினைப்பது ஏன்?

மொழிபெயர்ப்பு – திரு. பிரசன்ன பாரதி, ரிலீஃப் ஃபவுண்டேஷன், சென்னை.

மூல ஆங்கில கட்டுறை  – டா . சந்திரசேகர் பாலசந்திரன், நிறுவனர் மற்றும் இயக்குனர்,
த இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜியோகிராஃபிகல்  ஸ்டடீஸ், பெங்களூரு.

Categories:

No responses yet

Share your thoughts

Discover more from The Institute of Geographical Studies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading