திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டிக்கு அடுத்த ரயில் நிலையமான எளாவூரில் இறங்கிவிட்டீர்களா?

 

நன்றி Google

சரி..! அப்படியே, வலதுபக்கம் பாருங்கள்…புலிகாட் ஏரியின் கரையில் அமைந்துள்ள சுண்ணாம்புக்குளம் என்ற ஊருக்கு செல்லும் சாலை, கிழக்கு நோக்கி நீண்டிருப்பது தெரிகிறதா? சாலையின் இரண்டு பக்கமும் நல்ல பசுமையாக தெரிகிறதா..! கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறதா..!

1997ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பிரித்தாலும்கூட, இதுவும் பெரிய மாவட்டமாகத்தான் இருக்கிறது.

ஒரு பக்கம் சென்னையின் கலாச்சாரம், இன்னொரு பக்கம் ஆந்திராவின் தாக்கம், மறுபக்கம் கடற்கரை வாழ்க்கை, இன்னொரு பக்கமோ தமிழக கிராமியப் பண்பாடு. மொத்தத்தில் இந்த மாவட்டம் ஒரு நல்ல கலவைதான்..!

எளாவூர் ரயில் நிலையத்திலிருந்து அந்த சுண்ணாம்புக்குளம் சாலையில் பயணித்தால் வெறும் 1 கி.மீ தொலைவிலேயே எளாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளது.

வகுப்பறையில் உலக வரைபடத்தை சுவற்றில் இருந்த ஆணியில் மாட்டிவிட்டு, நான் மாணாக்கர்களை நோக்கி திரும்பிய அடுத்த நொடி,

‘சார், தண்ணியில கண்டம், தண்ணியில கண்டம்’ என்று ஒரு மாணவி தன் கண்களை அகல விரித்துக்கொண்டு என்னைப் பார்த்து சொன்னாள்.

நான் புரியாமல் சற்று திகைத்து, ‘யாருக்கு?’ என்றேன். ‘கண்டிப்பா எனக்கு இல்லை சார்’ என்று சொன்னவள், மீண்டும் தன் கையை வரைபடம் மாட்டப்பட்டிருக்கும் திசையை நோக்கி நீட்டி, ‘தண்ணியில கண்டம், தண்ணியில கண்டம்’ என்று சொல்லிவிட்டு, லேசான புன்னகையுடன் என்னைப் பார்த்தாள்.

நன்றி Google

நானும் திரும்பி சுவற்றையும், கரும்பலகையையும், வரைபடத்தையும் மாறிமாறி பார்த்தேனே ஒழிய, அந்த மாணவி குறிப்பிட்டதை கவனிக்கவேயில்லை. மீண்டும் திரும்பி அந்த மாணவியையே கேள்வியாய் நோக்கினேன்.

‘சார், அந்த மேப்ல பாருங்க… தண்ணியில எத்தனை கண்டம் இருக்குன்னு’ என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

‘இப்புடியெல்லாம் உங்களுக்கு எப்புடி பேசத் தோணுது’ என்று நான் ஆச்சர்யமாய் கேட்க, ‘எல்லாம் ஜியாக்ரஃபி கிளாஸ் கலந்துக்கிட்டப் பிறகுதான் சார்’ என்று அவள் சொல்ல…

அது நளினமான கிண்டல் என்றே நான் எடுத்துக்கொண்டேன்.

நான்: கண்டமே தண்ணியில இருக்கும்போது, அந்தக் கண்டத்து மேல இருக்குற நமக்கும் தண்ணியில கண்டம் இருக்குறது எவ்ளோ பெரிய கொடுமை..!

மாணவன்: சார், அமேசான் காட்டுக்கும் சஹாரா பாலைவனத்துக்கும் இடையிலான தொடர்பைப் பத்தி http://www.tigs.in வெப்சைட்ல படிச்சேன். உண்மையிலேயே தலையே சுத்திடுச்சி சார்.

நான்: இந்த பூமியும் அதிலுள்ள எல்லாமும் சுத்தும்போது, உன் தலை சுத்துனா மட்டும் என்னப்பா தப்பு..! இந்த உலகத்துல எல்லாமே சுத்தல்தாம்பா.

மாணவி: கடவுள் நம்பள ரொம்பத்தான் சுத்தல்ல விடுறாரு சார்..!

நான்: இந்த பூமியோட அமைப்பே ரொம்ப ரொம்ப சிக்கலானது. கற்கோளம், வாயுக்கோளம் மற்றும் நீர்க்கோளம் அப்புடீன்னு பாகங்களா பிரிச்சாலும், எது எங்கே தொடங்குது? எது எங்கே முடியுது? அப்டீன்னு நம்மளால எதையும் தெளிவா வரையறுக்க முடியாது.

நாம கொஞ்சம் ஈசியா புரிஞ்சிக்கிறதுக்காக அப்புடி பிரிச்சிக்கிறோம், அவ்ளோதான். மேலும், இந்த உலகத்தோட இயக்க விதிகள் ரொம்ப நுட்பமானது. ஒன்னோட ஒன்னு பின்னிப் பிணைஞ்சது. அதனோட தொடர்புகளையோ அம்சங்களையோ புரிஞ்சிக்கிறது அவ்வளவு லேசு இல்ல..!

உதாரணமாக, மனித மூளைய எடுத்துக்கலாமே..! மனித மூளை பல்லாயிரக்கணக்கான சிக்கலான நரம்பு முடிச்சுகளை கொண்டிருக்குறதுனாலதான், அதுக்கு அவ்வளவு சிந்தனைத் திறன் இருக்குது.

இல்லாட்டி, மனித மூளைக்கு அவ்வளவு வேல்யூ கிடையாது. நாமளும் மிருகங்கள் மாதிரிதான் இருப்போம். பூமியும் அப்புடித்தான்; அதில் எந்தளவுக்கு சிக்கல் இருக்கோ, அந்தளவுக்கு உயிரினங்கள் வாழுறதுக்கு உகந்த அம்சமா அது இருக்கு. அதன் அமைப்புல சிக்கல் இல்லைன்னா, நாம் உட்பட எந்த உயிரியும் அதுல வாழ முடியாது.

மாணவன்: அப்ப, நம்ம வாழ்க்கையிலயும் நிறைய சிக்கல்கள் இருந்தால்தான் அது சிறப்பான வாழ்க்கையா இருக்குமா சார்?

நான்: ரொம்ப பிரமாதமான கேள்வி. அதேசமயம், ரொம்பவும் சிக்கலான கேள்வி! இப்புடி சிக்கலா கேள்வி கேட்டு என்னை சிக்க வைக்கிறியே..! இது நியாயமா?

மாணவன்: எப்புடி சார், மத்த விஷயங்கள்ல மட்டும் நிறைய சிக்கல்கள் இருந்தா, அது சிறப்பானது அப்புடீன்னு சொல்றீங்க. ஆனா, வாழ்க்கையில மட்டும் அதிக சிக்கல் இருந்தா, அந்த வாழ்க்கை தப்பானதுன்னு சொல்றாங்களே…! இது எப்புடி சார் நியாயம்?

நான்: இந்தக் கேள்விக்கான விவாதத்தை நாம இன்னொரு நாளைக்கு வச்சிக்கலாம். இப்ப, மறுபடியும் சிக்கலான புவியியலுக்குள்ள போவோம்.

மாணவி: மறுபடியும் சிக்கலா சார்..!

நான்: அண்டார்டிகா அப்புடீன்னு உலகத்தோட தென் துருவத்துல ஒரு கண்டம் இருக்குறது உங்களுக்கெல்லாம் தெரியும். அங்க, மனுசங்க வாழ்றாங்களா?

 

நன்றி Google

மாணவன்: கிடையாது சார். பெங்குயின் போன்ற சில உயிரினங்கள் வாழுது. மனுசங்க அங்க வாழ்றது முடியாத காரியம். கொஞ்சம் ஆராய்ச்சியாளர்கள் மட்டும் இருக்காங்கன்னு நீங்க சொல்லியிருக்கீங்க.

நான்: கரெக்ட்… மனுசங்களும் வேறு பல உயிரிகளும் வாழ முடியாத அண்டார்டிகா கண்டத்துல உருவாகுற ஒரு பெரிய கடல் நீரோட்டம்தான், இந்த உலகத்தையே மொத்தமா வாழ வைக்குது தெரியுமா?

அதாவது,

“அண்டார்டிகாவுல நாம யாரும் வாழ முடியாது…அந்த அண்டார்டிகா இல்லாம நாம யாருமே வாழ முடியாது…”

மாணவி: சார், இதுக்குப் பேர்தான் ரொம்ப தெளிவா குழப்புறதா..!

மாணவன்: என்ன சார், மர்மக் கவிதை மாதிரியே சொல்றீங்க..!

நான்: அண்டார்டிகாவே ஒரு மர்ம உலகம்தான். அண்டார்டிகாவின் பனி உறைந்த கடலுக்குள்ள இருக்குற மலைகள்ல, கிட்டத்தட்ட 3 கி.மீ நீளமுள்ள அருவி வழியுது தெரியுமா?

அது ஒரு பயங்கர உப்புநீர் அருவி. அந்த அருவிதான் மிகப்பெரிய உலக நீரோட்டமா உருவெடுக்குது..!

மாணவன்: கடலுக்குள்ள மலைகள் இருக்குறத சொல்லியிருக்கீங்க. ஆனா, அந்த மலைகள்ல அருவி வழியுதா? தண்ணிக்குள்ள ஒரு தண்ணி அருவியா..! இது என்ன மாயாஜால உலகமா?

நான்: அப்புடித்தான் வச்சிக்கங்களேன்.

மாணவி: சார், இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் எடுக்குறாங்களே. எதுக்கு சார் சயின்சுல ஃபிக்ஷன் வேணும்? ஒரிஜினலா இந்த உலகத்தோட சயின்சே ஃபிக்ஷன் மாதிரிதான சார் இருக்கு..! கஷ்டப்பட்டு எதுக்கு கற்பனை பண்ணி அதையெல்லாம் செய்யுறாங்க?

நன்றி Google

நான்: ஃபென்டாஸ்டிக்..! உன் சிந்தனை அபாரம்! என்ன… அவுங்க கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கிறதுக்கு பதிலா, கொஞ்சம் ஈசியா கற்பனை பண்ணிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். கற்பனை செஞ்சாலும் இந்த உலகம் அதிசயம்தான்..! கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சாலும் இந்த உலகம் அதிசயம்தான்..!

மாணவன்: சார், நம்ம http://www.tigs.in வெப்சைட்ல இது பத்தின கட்டுரை இருக்குதா சார்?

நான்: ஓ… எஸ்..! அதுல இல்லாதது ஏது? நீங்க எல்லாரும் கட்டாயம் அந்தக் கட்டுரையப் படிக்கணும். அப்புடி படிக்கும்போது உங்க கண்ணுக்கு முன்னாடி மாயாஜால உலகம் விரியும்..!

இப்ப, இங்கே உங்க கண்ணு முன்னாடி தொங்கிக்கிட்டே காத்துல ஆடுற இந்த வரைபட உலகத்தை சுருட்டி வைக்கலாம்.

(உலக வரைபடத்தை சுருட்டி கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தேன்.)

மாணவன்: இந்த உலகத்தையே கைக்குள்ள அடக்குறதுங்கிறது இதுதானா சார்..!?

(முற்றும்)

 

எழுதியவர்: சொ.பிரசன்ன பாரதி

Categories:

Tags:

No responses yet

Share your thoughts

%d