“காவேரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ்

கண்டதோர் வையை பொருணை நதி”

– மகாகவி பாரதியார் கவிதைகள் (தேசிய கீதங்கள் தமிழ்நாடு – பாடல் 1)

பாடலின் பொருள்: தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி போன்ற நதிகள் ஓடுகிறது.

இவைமட்டுமல்ல! இன்னும் பல நதிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டில்! அப்படியென்றால் எத்தனை வளம் பொருந்திய இடமாகத் தமிழ்நாடு திகழ வேண்டும்!

வளம் என்ற வார்த்தையை இன்று பல துறைகளில் (fields) பயன்படுத்துகின்றோம். மனித வளம், அறிவு வளம், கணித வளம், இயற்கை வளம் என்று எத்தனையோ. “வளம்” என்ற சொல்லுக்கு “செழிப்பு”, “பசுமை”, “நிறைவு” (complete or fulfilled) என்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் “synonyms” என்று சொல்லுகிறோமே! அதுதான்!

பாரதியார், மேலே சொன்ன பாடலில் இப்படி மேலும் கூறுகிறார்:

“என மேவிய ஆறுகள் பலவோட – திரு

மேனி செழித்தத் தமிழ்நாடு”

மேனி செழித்தத் தமிழ்நாடு என்று நிலத்தை, மண்ணை மேனியாகவே (ஒரு உடம்பாகவே) உருவகப்படுத்துகிறார் (metaphor). மேனி செழித்தல் என்று எதைக் குறிப்பிடுகிறார்? அட, நமக்கு மிகவும் பிடித்த செடி கொடிகள் மற்றும் சோலைகளைத்தான்.

காவிரி என்ற சொல்லைத் தனியாகப் பிரித்தால் “கா” + “விரி” என்று வரும். “கா” என்றால் “சோலை” என்று ஒரு பொருள் உண்டு. ஆக, தான் செல்லுமிடமெல்லாம் “சோலை” வளத்தை விரித்துச் செல்வதால் “காவிரி” என்று பெயர் வந்தது.

அது சரி, “காவேரி” என்றும் அழைக்கின்றார்களே அதற்கு ஏதாவது காரணம் உண்டா என்று கேட்கிறீர்களா? உண்டு. தமிழ் இலக்கணத்தில் “இகரம்” “எகரம்” என்று மாறுவது உண்டு. இந்த மாற்றம் காலப்போக்கில் ஏற்பட்டிருக்கலாம்.

உதாரணம்: நிலம் –> மருவி “நெலம்” என்றும் அழைக்கப்படுகிறது.

இப்படி இசைத்தன்மையால் “வி” என்பது “வே” ஆகி “காவேரி” என்று ஆகிவிட்டது.

காவிரி –> காவேரி

     (இ)  –>       (ஏ)

சென்ற பதிவில் கல்லணைப்பற்றிக் கூறியிருந்தேன் அல்லவா? கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் காவிரி பல சிறு கிளை நதிகளாகப் பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலிலே கலக்கிறது, இந்த சிறு கிளைநதிகள் அரசலாறு, வெண்ணையாறு, வெட்டாறு, புது ஆறு, மன்னியாறு ஆகிய பல பெயர்களாக அழைக்கப்படுகிறது. இவைகள்கூட காவிரியின் பெயர்கள் என்றே சொல்லலாம்.

காவேரியின் கழிமுகத்தெதிர் நிலம் (delta) [மூலம் — https://tinyurl.com/yeytx585 — 19 பிப்ரவரி 2022 ம் தேதி பார்த்தபடி] இதனுடைய பெரிய படத்தை பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்.

“கா” என்றால் இன்னொரு அர்த்தமும் உண்டு. அதுதான் “சரஸ்வதி”. சரஸ்வதியை கல்விக் கடவுளாக வழிபடும் முறை தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலும் உண்டு. சரி, கல்விக்கும் காவிரிக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. கல்வியின் பயன் ஒரு நல்ல வாழ்க்கைமுறையை கொடுப்பது. நன்னெறிப்படுத்துதல் என்றும் பொருள்படும்.

இனிவரும் பதிவுகளில் காவிரிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இருந்த தொடர்பு, இருக்கும் தொடர்பு போன்றவற்றை பார்ப்போம். காத்திருங்கள்!


கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முயற்சி செய்து பாருங்கள்

  1. டெல்டா என்றால் என்ன? எப்படி அந்த பெயர் வந்தது?
  2. காவிரி டெல்டா பகுதி என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? உங்கள் அட்லசை (atlas) பயன்படுத்தி கண்டுபிடியுங்கள்.
  3. தமிழ்மொழி மேல் பற்று உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால், “இகரம்” “எகரம்” பற்றி ஆராய்ந்து பாருங்களேன். இந்த மாற்றம் உங்களுக்கு தெரிந்த வார்த்தைகளில் எப்போது ஏற்பட்டது என்று கண்டுபிடியுங்கள். உதாரணமாக “மெட்ராஸ்” (madras) பாஷையில் இப்படி வரும்:

என்ன –> இன்னா

எதற்கு –> இன்னாத்துக்கு 😊

இதுபோல பல உள்ளது. ரசியுங்கள்!

சொற்களஞ்சியம்(Glossary)

வையை  – வைகை

பொருணை – தாமிரபரணி

மேனி – உடம்பு

நடந்தாய் வாழி காவேரி!


பின்குறிப்பு: படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்

முரளி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். கேலக்ஸி மாண்டிசோரி அகாடமியில் தொடக்க இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் புவியியலாளரும், புவியியல் மற்றும் பிற சுவாரசியமான விஷயங்களில் கவனம் செலுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Murali Krishnan is from Chennai and works for Galaxy Montessori Academy as an Elementary Director. He is also a Geographer and passionate about writing articles in Tamil focusing on Geography and other interesting subject areas.

Categories:

One response

  1. திரு முரளி கிருஷ்ணன் எழுதிவரும் இந்த பதிவுகளை படிக்க படிக்க புது விஷயங்களை கற்றுக்கொண்டே வருகிறேன். காவேரி எங்கேயோ உள்ள நதியோ ஆறோ என்று தோணாமல் நம் குடும்பத்தையே சேர்ந்தவள் என்றுதான் தோன்றுகிறது. அதே சமயத்தில் அவளை எவ்வளவு கொடுமை படுத்திக்கொண்டிருக்கோம் என்றும் மனதில் சங்கடமும் ஆகிறது.

    அடுத்த பதிவை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Leave a Reply to Dr Chandra Shekhar BalachandranCancel reply

Discover more from The Institute of Geographical Studies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading