விழாக்கள் என்றாலே கொண்டாட்டம் தான்! விழாக்கள் இல்லாத கலாச்சாரம் ஒன்று இந்த உலகில் இருக்குமா என்ற கேள்வி கேட்டால் அதற்கு பெரும்பாலும் விடை காண முடியாது என்றே சொல்லலாம். நதிகள் எந்த அளவு முக்கியமோ அதேபோல் நதிகளுடன் தொடர்புடைய விழாக்களும் முக்கியம்.

காவிரி நதியைப் பற்றி பல புலவர்களும், பக்தர்களும், அறிஞர்களும் பாடியுள்ளனர் பேசியும் உள்ளனர். சிலர் அந்த நதிக்கரையின் அருகிலேயே வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு பாடலாசிரியர் மற்றும் பக்திமான் ஸ்ரீ தியாகராஜர்.  இவர் சங்கீத மும்மூர்த்திகளிலே ஒருவர். இவருடைய அஸ்தியானது காவிரியில்தான் கரைக்கப்பட்டது. பின்னர் அவருடைய சீடர்களில் சிலர் இவருக்காக ஒரு மணிமண்டபத்தை எழுப்பினார்கள். காலப்போக்கில் அது இடிந்து விழவே புதிதாக ஒன்றை எழுப்பி, வருடந்தோறும் “தியாகராஜ ஆராதனை” என்ற ஒரு இசை விழாவினை காவிரி நதிக்கரையில் உள்ள திருவையாற்றில் கொண்டாடுகிறார்கள். தென்றல் வீசும் காவிரிக்கரையில் இந்த விழா நாட்களில் நம் காதுகளில் இசையும் சேர்ந்து வீசும். நம்முடன் சேர்ந்து காவிரி அன்னையும் அந்த இசைக்குத் தலையாட்டி அசைந்து அசைந்து ஓடுகின்றாள்.

தியாகராஜ ஆராதனையில் இசைக்கலைஞர்கள்

Source: https://tamil.oneindia.com/

Click on the image to see a larger version

திருவையாறு என்ற பெயர் இந்த இடத்திற்கு எப்படி அமைந்தது? திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது (மூலம்).

“ஆடிக்கூழ தேடிக்குடி” என்ற ஒரு பழமொழி உண்டு. ஆடி மாதம் என்றாலே அதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. காரணங்கள் பல. ஆடி என்றாலே திருவிழாக்கள் தான். அந்த ஆடி மாதத்தில் ஒன்றான கொண்டாட்டம்தான் “ஆடிப்பெருக்கு”. இந்த கொண்டாட்டம் மிகப்பழமையானது. திரு. கல்கி அவர்கள் கூட தன்னுடைய “பொன்னியின் செல்வன்” தொடர்கதையில் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தை ஆடிப்பெருக்கின் போதுதான் அறிமுகப்படுத்துகிறார். இந்த விழாவில் மக்கள் ஒன்றுகூடி ஆறுகள் அனைத்திற்கும் விழா எடுப்பார்கள். இந்த விழா காவிரி ஆற்றுக்கும் நடக்கும். மழைப்பொழிந்து ஆற்றில் வெள்ளம் பெருகி மண்ணையும் மண்ணைச் சார்ந்து வாழும் அனைத்தையும் வாழவைக்க ஆறுகளிடம் செலுத்தும் ஒரு பிரார்த்தனையே இந்த விழா. மக்கள் கூடி ஆற்றங்கரையில் உட்கார்ந்து குடும்பத்துடன் உணவு உண்பது ஒரு வழக்கம்.

ஒரு புறம் விழாவின் மகிழ்ச்சி என்றால் மற்றொருபுறம் அவ்விழா முடிந்தவுடன் ஏற்படும் மாசுபாடு வார்த்தைகளால் சொல்லி மாளாது. எங்கு பாரத்தாலும் குப்பைதான். சில இடங்களில் மனித கழிவுகள் கூட இருக்கும். மக்களாகிய நாம் புனிதம் என்று புகழ்வதை நாமே புனிதமற்றதாக மாற்றிவிடுகிறோம்.

விழாக்கள் பெயரளவில் இருந்தால் மட்டும் போதாது அவை வாழ்க்கையோடு ஒன்றி இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் காவிரி போன்ற புனித ஆறுகளை பாதுகாப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. கை என்றவுடன் உங்கள் கைகளை பார்க்காதீர்கள் 🙂 அதாவது நாம் எடுக்கும் முயிற்சியில்தான் இருக்கிறது என்று பொருள்.

 

ஆடிப்பெருக்கின்போது மக்கள் காவிரிக்கு செய்யும் பூஜை

Image sources:

Image 1: https://tamil.samayam.com/

Image 2:https://hindijaankaari.in/

Click on the image to see a larger version

இன்னும் ஒரே ஒரு விழாவைப்பற்றி மட்டும் சொல்லி என் பதிவை நிறைவு செய்கிறேன். காணும் பொங்கல், பொங்கல் பண்டிகையின்போது வரும் நான்காவது நாள் விழா. அன்று மக்கள், குறிப்பாக காவிரிநதி அருகில் உள்ளவர்கள் முக்கொம்பு, கொள்ளிடம் போன்ற இடங்களுக்குச் சென்று காவிரியின் அழகை ரசிப்பதுடன், இந்த ஆற்றின் வரலாற்றை நினைவுகூர்ந்து நன்றிகலந்த வியப்புடன் அவரவர் வீட்டிற்குத் திரும்புவார்கள்.

இப்படி எத்தனையோ காவிரி ஆற்றோடு தொடர்புடைய விழாக்கள் நம் நாட்டில் கலந்துள்ளது. தொடர்ந்து படியுங்கள்!
____________________________________________________________________________________________________________________________________________________________
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முயற்சி செய்து பாருங்கள்

  1. ஆடிப்பெருக்கு விழாவிற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது என்னவென்று கண்டு பிடியுங்கள். பெயர்க்காரணம் தெரிந்து கொள்ளுங்கள்
  2. சங்கீத மும்மூர்த்திகள் யார்? ஓருவர் ஸ்ரீ தியாகராஜர். மற்றிருவர்?
  3. நதிகளுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
  4. காவிரியோடு இணைந்த விழாக்கள் ஏதேனும் உங்கள் ஊரைச்சுற்றி கொண்டாடப்படுகிறதா என்று கண்டு பிடித்து அதை இந்த வலைதளத்தில் பதிவிடுங்கள்.

சொற்களஞ்சியம்(Glossary)
• அறிஞர் – கற்றவர்
• அஸ்தி – சாம்பல்
• மணிமண்டபம் – நினைவிடம்
• நினைவுகூர்ந்து – நினைத்துப்பார்த்து
• வியப்பு – ஆச்சரியம்

நடந்தாய் வாழி காவேரி!

___________________________________________________________________________________________________________________________________________________________
பின்குறிப்பு: படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்

Featured Image Source: cultureandheritage.org

முரளி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். கேலக்ஸி மாண்டிசோரி அகாடமியில் தொடக்க இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் புவியியலாளரும், புவியியல் மற்றும் பிற சுவாரசியமான விஷயங்களில் கவனம் செலுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Murali Krishnan is from Chennai and works for Galaxy Montessori Academy as an Elementary Director. He is also a Geographer and passionate about writing articles in Tamil focusing on Geography and other interesting subject areas.

Categories:

Tags:

No responses yet

Share your thoughts

%d bloggers like this: