ஒரு நாட்டின் கலாச்சாரம் அந்நாட்டின் இயற்கைச்சூழலுடன் இணைந்திருக்கிறது.

பழங்காலம் முதல் இன்று வரை மக்கள் தங்கள் கலாச்சார விழாக்களைக் கொண்டாட இயற்கைச்சூழல் நிறைந்த இடங்களைத்தேடி தங்கள் குடும்பத்துடனோ நண்பர்களுடனோ கொண்டாடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அச்சூழல்களின் தனித்தன்மையாகவோ இல்லை ஒரு பாரம்பரிய பழக்கமாகவோ இருக்கலாம். அப்படிப்பல கொண்டாட்டங்கள் காவிரி ஆற்றைச் சுற்றி இன்றும் நடந்துகொண்டு இருக்கின்றன.

நாம் சென்ற சில பதிவுகளில் காவேரி மக்களால் புனித நீராகவும், தாயாகவும் பல விதங்களில் கொண்டாடப்படுகிறாள் என்று பார்த்தோம் அல்லவா? அப்படி ஒரு கொண்டாட்டம் கர்நாடகாவில் கொடகில் உள்ள பிரம்மகிரி மலையில் தொடங்கும் தலக்காவிரிக்காக கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் அப்பகுதியில் வாழும் கொடவர்கள் இந்து மக்களின் நாட்காட்டியின் படி துலா மாதத்தின் முதல் நாளில் கொண்டாடுகிறார்கள். இதற்கு பெயர் “காவேரி சங்க்ரமனா”.  ஆங்கில நாட்காட்டியின் படி October மாத நடுவில் இக்கொண்டாட்டம் வரும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீரானது பிரம்ம குண்டத்தில் இருந்து தலக்காவேரியில் உள்ள ஒரு குளத்தில் விழுகிறது, இதை புனித நீராகக் கருதி ஒவ்வொரு கொடவர் வீட்டிலும் வைத்திருப்பார்களாம்! பல இடங்களில் இருந்து இந்த விழாவைக்காண மக்கள் திரளாக வருகிறார்கள்.

JMK - sankramana-kaveri

“காவேரி சங்க்ரமனா” கொண்டாட்டத்தின் போது பிரம்ம குண்டத்தின் அருகே உள்ள மக்கள் Source: https://www.karnatakatourism.org/ [Accessed 12 March 2022]. Click on the image to see a larger version

அப்படியே கொஞ்சம் கீழே இறங்கி தமிழ்நாட்டுப் பக்கம் வந்தால் ஒரு முக்கியமான கொண்டாட்டத்தைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நீலகிரியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் குறிஞ்சிமலரைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அதுபோல 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் கொண்டாடப்படும் ஒரு விழாதான் “காவிரி மகா புஷ்கரம்” — ஆயிரவருடம் பழமையான மற்றும் பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவைக்காண பல ஊர்களில் இருந்து மக்கள் ஸ்ரீரங்கம் போன்ற தலங்களுக்கு வருவார்கள். காவிரி நதிக்கு தங்களுடைய நன்றியை செலுத்துவதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது வியாழகிரகம் (Jupiter) துலா ராசியில் (Libra) பிரவேசிப்பதை கொண்டாட ஏற்பட்டதாகவும் வரலாறு. இந்த விழா சமயத்தில் காவிரி நதியில் குளித்தால் உடலும் மனமும் ஆரோக்கியம் பெரும் என்று மக்களிடையே ஒரு நம்பிக்கை.

இன்னும் ஸ்வாரசியமான பல விஷயங்கள் இருக்கிறது. காத்திருங்கள்!


கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முயற்சி செய்து பாருங்கள்

  1. குறிஞ்சிமலர் ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் பூக்கிறது?
  2. காவேரி சங்க்ரமனாவைப் பற்றியோ, காவிரி மகா புஷ்கரத்தைப் பற்றியோ உங்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்தால் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  3. கொடவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சொற்களஞ்சியம்(Glossary)

  • சுவாரசியமான– சுவையான, மனதைக் கவரும்
  • பிரவேசித்தல்  – உள்ளே செல்லுதல்
  • குண்டம் – குளம்

நடந்தாய் வாழி காவேரி!


பின்குறிப்பு: படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்

Featured Image Source: https://aanmeegam.co.in/blogs/kaveri-pushkaralu/

முரளி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். கேலக்ஸி மாண்டிசோரி அகாடமியில் தொடக்க இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் புவியியலாளரும், புவியியல் மற்றும் பிற சுவாரசியமான விஷயங்களில் கவனம் செலுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Murali Krishnan is from Chennai and works for Galaxy Montessori Academy as an Elementary Director. He is also a Geographer and passionate about writing articles in Tamil focusing on Geography and other interesting subject areas.

Categories:

One response

Share your thoughts

%d