ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களுக்கு நாலாயிர திவ்யபிரபந்தம் என்று பெயர். நாம் காவேரி பற்றிய இத்தொடர் கட்டுரையில் ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் காவேரி அன்னையைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வருகிறோம். சென்ற பதிவில் நம்மாழ்வார் எழுதிய சில பாசுரங்களைக் கொண்டு காவேரியின் சிறப்பை அனுபவித்தோம். இந்த பதிவில் கொங்கு நாட்டை ஆண்ட குலசேகர ஆழ்வார் என்று அழைக்கப்படும் குலசேகர மன்னன் எழுதிய “பெருமாள் திருமொழி” பாசுரங்களில் சிலவற்றைக் கொண்டு காவிரியின் சிறப்பை மேலும் சுவைப்போம்.
“மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு.”
– ஔவையார் இயற்றிய மூதுரை – 26 பாடல்
இப்பாடலின் பொருள்:
மன்னனையும் தன் குறை நீங்கக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால், மன்னனைக் காட்டிலும் கற்றவனே சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு.
(Source, Accessed: 11 July 2022)
ஆழ்வார்களில் குலசேகரரும், திருமங்கை ஆழ்வாரும் மன்னர்களாக இருந்து ஆழ்வார்கள் ஆனார்கள். திருமங்கை மன்னனைப் பற்றி நாம் வேறொரு பதிவில் காண்போம். மேலே கூறிய வார்த்தைகள் அனைத்தும் குலசேகர ஆழ்வாருக்கு பொருந்தும். அவர் மன்னனாக மட்டும் இருந்து நாட்டை ஆளவில்லை. கற்றோனாகவும் இருந்து கன்னித்தமிழில் பாசுரங்களை இயற்றிச் சென்றுள்ளார். அதனால்தான் அவர் புகழ் எங்கும் பரவி இருக்கிறது.
கொங்குநாடு என்று கொண்டாடப்படும் மண்டலத்தை இவர் ஆண்டுள்ளார். இவர் பிறந்த ஊர் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். இவர் ஒரு ஸ்ரீராமபக்தர். இதனாலேயே இவருக்கு குலசேகரப் பெருமாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. வைணவத்தில் “பெருமாள்” என்ற சொல் இராமனைக் குறிக்கும். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. அதில் சிலவற்றில் காவேரிப் பற்றி அவர் கூறியிருப்பதை அனுபவிப்போம் வாருங்கள்.
“இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித்
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்
கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே”
இப்பாடலின் பொருள்:
தெளிந்த நீரினையுடைய காவிரி, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவரங்கப்பெருமானின் திருவடிகளைப் பிடித்து விடுகிறாளாம். அந்த திருவரங்கத்தில், ஆதிசேஷனாகிய (ஐந்து தலை நாகம்) வெண்மைநிற படுக்கையில் நீல ரத்னக்கல் போல் கண்வளர்கின்ற திருவரங்கப்பெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?
காவிரி நீரைத் தெளிந்த நீர் என்று போற்றுகிறார் ஆழ்வார். தெளிந்த நீராக இருப்பதற்கு அது எப்பொழுதும் ஓடிக்கொண்டே மக்களின் பயன்பாட்டில் இருக்கவேண்டும். இன்று காவேரி தொடர்ந்து ஒடுவதும் இல்லை! மக்களின் பயன்பாட்டிலும் பெரிதளவு இல்லை! அவள் தூய்மை இழக்கவில்லை. நாம் அவளை தெளிந்த நீராக ஓட விடுவதே இல்லை!
அடுத்த ஒரு பாசுரம்:
“திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்
கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்
கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே”
இப்பாடலின் பொருள்:
மணற்குன்றுகள் கொண்ட கரையை உடைத்தானக் காவிரியின் நடுவில் ஆதிசேஷன் மேலே துயில் கொள்ளும் கடல் போல் நீண்டு விளங்குகின்ற கரிய திருமேனியையுடைய திருவரங்கப்பெருமாளை சேவிக்க வேண்டும் என்ற ஆசையினால் இந்த பத்து பாசுரங்களை சொல்பவர்கள் திருவரங்கநாதனின் திருவருளைப் பெறுவார்கள்.
(Source; Accessed 11 July 2022)
நதிகள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பங்கினை வகிக்கிறது. பழங்காலத்தில் இருந்தே மக்கள் நதிகளின் கரைகளையொட்டியே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். நம் தாகத்தை தீர்க்க மட்டும் நதிநீர் பயன்படுவதில்லை. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கு(transportation) இன்றும் மக்கள் நதிகளை பயன்படுத்துகிறார்கள்.
நைல் (Nile) நதியினை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். எகிப்து(Egypt) நைல் நதியின் ஒரு பரிசு என்றே குறிப்பிடுவார்கள். காரணம்? நதிநீர் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தால், பாறைகளில் அரிப்பு (erosion) ஏற்படும். நதியில் வெள்ளம் ஏற்படும் காலத்தில், நதியின் ஆழத்தில் அரிப்புகளினால் ஏற்பட்ட, புதைந்து கிடக்கும் பல படிவுகளை (sediments) கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும். அந்த படிவுகள் வளம் நிறைந்ததாக இருக்கும். அதனால் மண்ணின் வளம் பெருகும். மண்ணின் வளம் பெருகினால் பயிர் செழித்து வளரும். பயிர்கள் செழித்து வளர்ந்தால் உணவுப்பஞ்சமே ஏற்படாது. என்ன ஒரு சுழற்சி பாருங்கள்!
அலைகள் ஆர்ப்பரித்து ஓடினாலே அன்றி மணற்குன்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை . காரணம் அலைகளில் அடித்துவரப்படும் மண் குவிந்து மணற்குன்றுகளாக மாறும். ஓடும் நீரின் அளவு அதிகமாக இருந்தால்தான் அலைகள் ஏற்படும். இன்று காவிரியில் அலைகளும் இல்லை! மணற்குன்றுகளும் இல்லை! வறண்டு காணப்படுகிறாள்!
மழை வந்தாலே அன்றி ஆற்றில் நீர் இருக்காது. அப்படியே வந்தாலும் அதை அணைக்கட்டி (dam) சேமித்து வைத்து விடுகிறோம். இந்த காரணத்தினாலேயும் ஆற்றில் நீர் ஒடுவதில்லை! பருவமழை வரும் காலத்தில் மட்டுமே ஆற்றில் நீரை இப்பொழுது பார்க்க முடிகிறது. அந்த ஆற்றின் போக்கினை தடுத்து பல கட்டிடங்களை கட்டிவிட்டோம். இன்று வளத்தை தர வேண்டிய காவிரி தன் போக்கின் திசைமாறி அழிவை தந்துவிட்டுச் செல்கிறாள். தொடர் நடியாக ஓடிக்கொண்டிருந்தவள் இன்று பல இடங்களில் ஊசி அளவே காணப்படுகிறாள். இது யாருடைய குற்றம்?
- அணைக்கட்டி வைத்த நம் குற்றமா?
- ஆற்றின் திசையை மாற்றிய நம் குற்றமா?
- காகிதங்களையும், பிளாஸ்டிக் பைகளையும், குப்பைகளையும், கழிவுகளையும் கொண்டு ஆற்றில் கொட்டும் நம் குற்றமா?
- அல்லது மழை பல முறை போய்க்கிறதே! ஆக இயற்கையின் குற்றமா?
தெரிந்தால் சொல்லுங்கள்.
பொன்னியின் (காவிரியின்) பெருமைகளை ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு மேலும் அனுபவிப்போம். காத்திருங்கள்!
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முயற்சி செய்து பாருங்கள்
- குலசேகரஆழ்வார் திருவரங்கத்தைத் தவிர வேறு எந்த கோவில்களைப் பற்றி பாடியுள்ளார்?
- குலசேகர மன்னன் ஆண்ட காலம், அவர் நாட்டின் தலைநகரம், அவர் ஆட்சியின் சிறப்பு போன்றவைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
- சேரநாட்டில் தமிழ் தலையான மொழியாக இல்லாமல் இன்று மலையாளம் பேசும் கேரளமாக எப்படி எப்போது மாறியது?
- திருவஞ்சிக்களம் எங்கு உள்ளது? இன்றும் அந்த ஊர் அதே பெயருடந்தான் விளங்குகிறதா?
குறிப்பு: தமிழகத்தில் சேலம், கோவை போன்ற நகரங்கள் கொங்கு மண்டலத்தில்தான் உள்ளது. அங்கு தலையான மொழி தமிழ்தான்.
(Source: https://www.facebook.com/profile.php?id=100077100567565)
சொற்களஞ்சியம்(Glossary)
- மாசு – அழுக்கு (இங்கு மன அழுக்கை குறிக்கிறது)
- கற்றோன் – படித்தவன்
- சீர்தூக்கி பார்த்தல் – உயர்வு தாழ்வு பார்த்தல்
- மண்டலம் – பிராந்தியம் (region, province)
- ஆர்ப்பரித்து – முழங்கி (இங்கே நீரின் ஓசையை குறிக்கிறது)
நடந்தாய் வாழி காவேரி!
பின்குறிப்பு: படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்
Featured Image: A view of Kāveri. Source: [Accessed 11 July 2022]
முரளி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். கேலக்ஸி மாண்டிசோரி அகாடமியில் தொடக்க இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் புவியியலாளரும், புவியியல் மற்றும் பிற சுவாரசியமான விஷயங்களில் கவனம் செலுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Murali Krishnan is from Chennai and works for Galaxy Montessori Academy as an Elementary Director. He is also a Geographer and passionate about writing articles in Tamil focusing on Geography and other interesting subject areas.
No responses yet