“கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்,

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்,

எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும்,

செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் செய்கின்றாயே?”

                                             – 7 ஆம் பத்து 2 ஆம் திருவாய்மொழி முதல் பாசுரம்

இது ஆழ்வார்களில் தலைவர் என்று போற்றப்படும் சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்ற பிரபந்தத்தில் வரும் ஒரு பாசுரம். இப்பாசுரத்தில் திருவரங்கத்து ரங்கநாதப் பெருமாள் குறித்துப் பாடுகிறார். அப்படிப் பாடும்போது “அழகிய மீன்கள் துள்ளி ஓடும் புனித நீரான காவேரி” என்று குறிப்பிடுகிறார். ஆக, காவிரியைப் பாடிய ஆழ்வார்கள் அனைவரும் ஒருமனதாக காவிரி நதியை புனித நீர் என்றே வர்ணிக்கிறார்கள். அவள் மண்ணை மட்டும் புனிதப் படுத்துவதில்லை. அந்த மண்ணில் வாழும் மண்ணின் மைந்தர்களையும் சேர்த்து அல்லவா புனிதப்படுத்துகிறாள்! அந்த அழகிய காவிரி, புனிதக்காவிரி, அகண்ட காவிரி என்று பல பெயர்களோடு விளங்கும் காவிரி நதியைப்பற்றி ஆழ்வார்களில் தலைவர் என போற்றப்படும் நம்மாழ்வாரின் பாசுரங்களில் சிலவற்றைக் கொண்டு அனுபவிப்போம்.

“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்பார்கள். ஊருக்கு ஏற்றத்தைக் கொடுப்பவள் காவிரி என்றால், அவளுக்கும் ஏற்றத்தைக் கொடுப்பவர்கள் புலவர்கள், கவிஞர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றோர்.

நம்மாழ்வார் தன்னுடைய 7ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழி 2ஆம் பாசுரத்தில் இப்படிக் கூறுகிறார்:

குறிப்பு:

  • திருவாய்மொழியில் மொத்தம் ஆயிரத்து நூற்றிரெண்டு பாசுரங்கள் உள்ளன.
  • அவற்றை பத்து பத்தாகப் பிரிப்பார்கள். ஒரு பத்து என்றால் நூறு பாசுரங்கள் என்று பொருள்.
  • ஒன்றாம் பத்து என்றால் முதல் நூறு பாசுரங்கள் என்று பொருள்.
  • ஒரு பத்தில் பத்து திருவாய்மொழிகள் இருக்கும்.
  • ஒரு திருவாய்மொழி என்றால் பதினோரு பாசுரங்கள்.
  • ஆக, ஒன்றாம் பத்து ஒன்றாம் திருவாய்மொழி என்றால் முதல் நூற்றில், முதல் பத்து பாசுரங்கள் என்று பொருள்.
  • அதில் எந்த பாசுர எண் குறிக்கப்படுகிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை கீழே ஒரு செயல்வழிப் படமாகக் (flowchart) கொடுத்துள்ளேன்.


Click on the image to see a larger version

என்ன கணிதத்தை உள்ளே கொண்டுவந்து விட்டேன் என்று நினைக்கிறீர்களா? இது மனப்பாடம் செய்வதற்கும் ஞாபகத்தில் கொள்வதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்ட ஒரு பழக்கம். இதன் சிறப்பு என்னவென்றால் இப்பழக்கம் இன்றும் அப்படியே இருக்கிறது. என்ன ஒரு கலாச்சாரம் பாருங்கள்! சரி நாம் பாசுரத்திற்கு வருவோம்.

“என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர்மல்க இருக்கும்,

என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?  என்னும் வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்,

முன்செய்த வினையே! முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,

முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்! என்கொலோமுடிகின்றது இவட்கே?”

                                                    – 7 ஆம் பத்து 2 ஆம் திருவாய்மொழி இரண்டாம் பாசுரம்

இப்பாசுரத்தின் பொருள்

திருவரங்கநாதனை எண்ணி உருகும் ஆழ்வார், தலைமகளாகத் தன்னை எண்ணிக்கொண்டு (தலைமகள் என்றால் Heroine அல்லது beloved என்பது பொருந்தும்) வருந்துகிறார். இதைக்கண்ட அந்த தலைமகளின் தாயார் பாடும் பாசுரமாக இது உள்ளது. இதில் “என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?” என்ற வரியில் காவேரியைப் போற்றுகிறார் ஆழ்வார். காவிரிநீர் வெள்ளம் சாதாரணமாக ஓடவில்லையாம்! பெருக்கெடுக்கும் அலைகளுடன் ஓடுகிறாளாம். அப்படிப்பட்ட காவிரியால் சூழப்பட்ட திருவரங்கநாதனை எண்ணிப் பாடுகிறாள்.

இன்னும் ஒரு பாசுரத்தை காண்போம்.

“மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே! என்னும் மாமாயனே! என்னும்,

செய்யவாய் மணியே! என்னும் தண் புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,

வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும் விண்ணோர் முதல்! என்னும்,

பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய் பாவியேன் செயற்பாலதுவே.”

                                                                   – 7 ஆம் பத்து 2 ஆம் திருவாய்மொழி ஆறாம் பாசுரம்

இப்பாசுரத்தின் பொருள்

இதுவும் தாய் பாசுரமாகவே அமைந்துள்ளது. இதில் காவிரியின் சிறப்பைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார். புனல் என்றால் நீர் என்று பொருள். “தண்” என்பது குளிர்ச்சியைக் குறிக்கும். குளிர்ந்த நீர் நிறைந்த காவிரி நதியால் சூழப்பட்ட திருவரங்கம் என்று பொருள். மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் குளிர்ந்த நீர் என்றே தோன்றும். குளிர்ச்சி என்பது தண்ணீரின் தன்மை. அதில் என்ன சிறப்பு? அக்குளிர்ந்த நீரினில் நீராடினாலோ அல்லது நீரைக் குடித்தாலோ நம் உடலும் மனமும் நலமாக இருக்கும். தவிர எப்பொழுதும் நீரால் சூழப்பட்டது என்றால் அந்த ஊரின் செழிப்பைச் சொல்ல வேண்டியதில்லை. ஆக, செழிப்பான திருவரங்கத்தில் உறையும் திருவரங்கநாதனைப் பாடுகிறார் ஆழ்வார்.

இன்று காவிரியில் தண்ணீர் எப்பொழுதும் ஓடுவதில்லை; குளிர்ந்த நீர் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் நாம் செய்யும் மாசுபாடுதான். அலைகளுக்கு பதிலாக ரசாயன நுரைகளும் குப்பைகளும்தான் இன்று காவிரியில் அதிகம். மீன்கள் உள்ளனவா? என்று தேடிப்பார்க்கவேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் காவேரி நதி கூட ஒரு நாள் இல்லாமல் போய்விடுவாள். இந்த நிலை மாற வேண்டும். அது நடக்குமா என்பது இப்போதுவரை பெரிய கேள்விக்குரியாகவே உள்ளது!

Source:The Hindu

Click on the image to see a larger version

பொன்னியின் (காவிரியின்) பெருமைகளை ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு மேலும் அனுபவிப்போம். காத்திருங்கள்!


கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முயற்சி செய்து பாருங்கள்

 1. நம்மாழ்வார் பாடிய மற்ற மூன்று பிரபந்தங்கள் யாவை? அவற்றில் காவிரியை பாடியிருக்கிறாரா என்று கண்டு பிடியுங்கள்.
 2. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடும்போது காவிரியில் உள்ள அனைத்து குப்பைகளும் அடித்துச் செல்லப்படுகின்றன. அவை சேருமிடம் எது? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சொற்களஞ்சியம்(Glossary)

 • மைந்தர்கள் – மக்கள்
 • அகண்ட – விரிந்த, பெரிய
 • ரசாயனம் – கெமிக்கல் (chemical)

நடந்தாய் வாழி காவேரி!


பின்குறிப்பு: படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்

Featured Image Source: https://commons.wikimedia.org/wiki/File:Cauvery_Kaveri_River_Karnataka_India_%284%29.jpg

முரளி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். கேலக்ஸி மாண்டிசோரி அகாடமியில் தொடக்க இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் புவியியலாளரும், புவியியல் மற்றும் பிற சுவாரசியமான விஷயங்களில் கவனம் செலுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Murali Krishnan is from Chennai and works for Galaxy Montessori Academy as an Elementary Director. He is also a Geographer and passionate about writing articles in Tamil focusing on Geography and other interesting subject areas.

Categories:

No responses yet

Share your thoughts

%d bloggers like this: