யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

என்றார் மகாகவி பாரதியார். ஓசை இனிமை ஒன்றால் மட்டும் இவர் இந்த ஏற்றத்தைச் சொல்லவில்லை. அந்த மொழியை பேசும்போது ஏற்படும் உணர்வு, புரிதல், நெருக்கம் என்று இப்படி பலவற்றைச் சொல்லலாம். ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியை பேசுவதால் மட்டும் வந்து விடாது. அம்மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகப் பலர் செய்யும் முயற்சியே அதற்கு என்றும் துணை நிற்கும். உதாரணமாக, பல பேச்சுவழக்கில் மட்டும் இருந்த மொழிகள் இன்று நடைமுறையிலிருந்து முற்றிலும் மறைந்து விட்டதை நாம் பார்க்கிறோம். அப்படிப் பார்த்தால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு இன்று நாம் எடுக்கும் முயற்சி மிகக் குறைவு என்றே சொல்லலாம்.

சரி, காவிரி நதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென தமிழ்மொழிப் பற்றி பேசுகிறாரே என்று எண்ணுகிறீர்களா? விஷயம் இருக்கிறது.

நதிக்கும் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வற்றாத ஜீவநதியாக நாம் காவேரியை பார்க்கிறோம். காரணம்? வழிநெடுகிலும் அவள் ஏற்படுத்தும் வளங்களை எண்ணிச் சொல்ல முடியாது! ஓடிக்கொண்டே இருக்கும் அவள் கடலில் சங்கமித்தாலும், அந்த நீண்ட பயணம் அவளை தனித்துக் காட்டுகிறது. தமிழ்மொழியும் சொல்லில், பயன்பாட்டில், வளர்ச்சியில் என்று பல கோணங்களில் இன்று வரை வற்றாத மொழியாகவே விளங்குகிறது. நதிக்கு பல கிளைகள் உள்ளதுபோல் தமிழ்மொழிக்கும் பல கிளைகள் உண்டு. இலக்கணம், இலக்கியம், பாடல்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் தமிழ்மொழிக்கு பெரிதும் தொண்டு புரிந்தவர்களில் ஆழ்வார்களும், நாயன்மார்களும், கவிஞர்களும், புலவர்களும், எழுத்தாளர்களும் ஏராளமாக உள்ளனர். அவர்களில் தனிச்சிறப்புப் பெற்றவர்கள் ஆழ்வார்கள்.

“ஆழ்வார்கள்” பெயர்க்காரணம் கூறவேண்டும் என்றால் பலவற்றைச் சொல்லலாம். அவர்களின் தேனினும் இனிய பாசுரங்களினால் நம்மை ஆள்வார்கள் என்பதினால் ஆழ்வார்கள் என்று சொல்லலாம். பகவான் ஸ்ரீ விஷ்ணுவிடம் ஆழ்ந்த பக்தி கொண்டதாலும் ஆழ்வார்கள் என்று பெயர் பெற்றனர். பாசுரங்கள் என்றால் பாடல்கள் என்று பொருள். இறைவன் மீது கொண்ட பக்தியின் வெளிப்பாடே பாசுரங்கள்.

ஸ்ரீரங்கம் (திருவரங்கம் என்றும் சொல்லலாம்) வைணவ கோவில்களில் முதல் திவ்யதேசமாகக் கொண்டாடப்படுகிறது. ஆழ்வார்கள் அனைவரும் பாடிய ஒரே கோவில் இதுவே என்று சொல்லலாம்.

இதில் ஒரு சிறப்பைப் பாருங்கள்! தமிழ் மொழியில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 247. ஆழ்வார்கள் அனைவரும் சேர்ந்து இந்த கோவிலுக்குப் பாடிய பாசுரங்களின் எண்ணிக்கை 247. என்ன ஒரு பொருத்தம்!

Image source: http://www.ishaoutreach.org

Click on the image to see a larger version

அந்த ஆழ்வார்களின் வரிசையுள் முதலாழ்வார்கள் என்று கொண்டாடப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய இவர்கள் மூவரும் தங்கள் பாசுரங்களில் காவிரியைப்பற்றி நேராகப் பாடவில்லை.

திருவரங்கத்தைப் பற்றி பாடியிருந்தாலும் காவிரி நதியைப்பற்றி நேரடியாக குறிப்பிடவில்லை. அடுத்ததாக சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்னும் ஊரில் பிறந்த திருமழிசையாழ்வார் தன்னுடைய “திருச்சந்தவிருத்தம்” என்ற பிரபந்தத்தில் (பாடல் தொகுப்பில்) 49, 50, 51 ஆம் பாசுரங்களில் திருவரங்கத்தையும் அதைச்சுற்றி ஓடும் காவிரிநதியையும் கீழ்வருமாறு பாடியுள்ளார்:

கொண்டைகொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்
உண்டைகொண்ட ரங்கவோட்டி யுள்மகிழ்ந்த நாதனூர்
நண்டையுண்டு நாரைபேர வாளைபாய நீலமே
அண்டைகொண்டு கெண்டைமேயு மந்தணீர ரங்கமே

                                                                                                            – திருச்சந்தவிருத்தம் 49ஆம் பாசுரம்

இப்பாசுரத்தின் பொருள்:

வீரனான இராமன் வாழும் திருவரங்கத்தில் குளிர்ந்த நீர் பெருக்கு உடைய காவிரியில் வாளைமீனும் கெண்டை மீன்களும் நண்டை தின்று நடந்து கொண்டிருக்கும் நாரையைப் பார்த்தும் எந்த விதமான பயமும் இல்லாமல்  பாய்ந்து செல்கின்றன. ”

வெண்டிரைக்க ருங்கடல்சி வந்துவேவ முன்னோர்நாள்
திண்டிறல்சி லைக்கைவாளி விட்டவீரர் சேருமூர்
எண்டிசைக்க ணங்களுமி றைஞ்சியாடு தீர்த்தநீர்
வண்டிரைத்த சோலைவேலி மன்னுசீர ரங்கமே

                                                                                                          – திருச்சந்தவிருத்தம் 50ஆம் பாசுரம்

இப்பாசுரத்தின் பொருள்:

வலிமைமிக்க தன் கைகளால் அம்புகளை எய்த வீரனான இராமன் வாழும்  திருவரங்கத்தில் வண்டுகள் வந்து ரீங்காரம் செய்யும் தோட்டங்களும், தூயநீரான காவிரியும் உள்ளன.  அங்கே  எட்டுத்  திக்கிலுமிருந்து மக்கள் வந்து தீர்த்தமாடி  அவனுடைய திருவடியைத் தொழுகின்றனர் .”

 சரங்களைத்து ரந்துவில்வ ளைத்துஇலங்கை மன்னவன்
சிரங்கள்பத்த றுத்துதிர்த்த செல்வர்மன்னு பொன்னிடம்
பரந்துபொன்னி ரந்துநுந்தி வந்தலைக்கும் வார்புனல்
அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே

                                                                                                           – திருச்சந்தவிருத்தம் 51ஆம் பாசுரம்

இப்பாசுரத்தின் பொருள்:

“வில்லைக் கொண்டு இலங்கைக்கு அதிபதியான இராவணனின் பத்து தலைகளையும் வெட்டிய வீரனான இராமன் வாழும் திருவரங்கத்தில், பல இடங்களிலிருந்து பொன் மற்றும் விலைமதிக்க முடியாத பொருள்களை வாரிக்கொண்டு வந்து சேர்த்து, எப்பொழுதும் வற்றாமல் ஓடிக்கொண்டு இருக்கும் காவிரி இருக்கிறாள்.  நான்முகனான பிரமனால் வணங்கப்படும் கோயில்  திருவரங்கம்.

இம்மூன்று பாசுரங்களிலும் நேரடியாக காவிரியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், திருவரங்கத்தைச் சுற்றி ஓடும் நதி காவிரிதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பொன்னியின் (காவிரியின்) பெருமைகளை ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு மேலும் அனுபவிப்போம். காத்திருங்கள்!

________________________________________________________________________________________________________________________________________________________________

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முயற்சி செய்து பாருங்கள்

  1. திவ்யதேசம் என்று ஏன் பெயர் வந்தது? இப்பெயர் அனைத்து கோவில்களுக்கும் பொருந்துமா அல்லது குறிப்பிட்ட சில கோவில்களுக்கு மட்டும் பொருந்துமா?
  2. “திருவரங்கம்” வைணவக் கோவில்களில் முதல் கோவிலாக ஏன் கருதப்படுகிறது?
  3. 247 பாசுரங்களை பாடிய ஆழ்வார்களின் தனிப் பங்களிப்பு, அதாவது ஒவ்வொருவரும் திருவரங்கத்திற்கு பாடிய பாடல்களின் எண்ணிக்கை என்ன என்று கண்டுபிடியுங்கள்

சொற்களஞ்சியம்(Glossary)

  • சங்கமம் – கூடுதல்
  • கோணம் – விதம், முறை
  • உண்டைக்கட்டி – மாவினால் செய்த ஒரு உருண்டை
  • பாசுரம் – பாடல்
  • தீரத்தமாடுதல் – குளித்தல்

நடந்தாய் வாழி காவேரி!

____________________________________________________________________________________________________________________________________________________________________

பின்குறிப்பு: படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள்

Featured Image Source

முரளி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். கேலக்ஸி மாண்டிசோரி அகாடமியில் தொடக்க இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் புவியியலாளரும், புவியியல் மற்றும் பிற சுவாரசியமான விஷயங்களில் கவனம் செலுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Murali Krishnan is from Chennai and works for Galaxy Montessori Academy as an Elementary Director. He is also a Geographer and passionate about writing articles in Tamil focusing on Geography and other interesting subject areas.

Categories:

3 Responses

  1. திருவரங்கத்தை பற்றி எத்தனையோ பெரியோர்கள் பாடியிருக்கிறார்கள். அதிலும் கன்னடம், தெலுங்கு, தமிழ், மற்றும் சம்ஸ்க்ருத மொழிகளில் மிக இனிமையான பாடல்களின் பொக்கிஷமே படைத்திருக்கிறார்கள். விசேஷமென்றால் மூன்று ஆசார்யர்களும் (சங்கரர், இராமானுஜர், மத்வாசாரியர்) இந்த பொக்கிஷத்திற்க்கு தம்தம் பாடல்களை சேர்த்திருக்கிறார்கள்.

    இப்படி பல மொழிகள், பல தத்துவ நிலைகள், பல கலாசார வகைகள் எல்லாம் திருவரங்கத்தையும் அதை சுற்றியிருக்கும் காவிரியையும் கொண்டாடியிருக்கிறார்கள்.

    காவேரியும் திருவரங்கமும் ஒன்று சேர்ந்து இணைபிரியாமல் மிக்க புண்ணிய ஸ்தலமாகியுள்ளன.

    அடுத்து என்னவெல்லாம் புது விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

    நன்றி.

    • அருமையான நடை. காவிரி ஆற்றைப் பற்றிய செய்தியோடு நிறுத்தி விடாமல் அதை ஆன்மீக ரீதியாகத் தொகுத்து வழங்கி இருப்பது தனிச் சிறப்பு. வாழ்த்துக்கள். அடுத்த அத்தியாத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

Share your thoughts

%d bloggers like this: