சாதாரணமாக ஒரு ரெயிலிலேயோ பஸ்ஸிலேயோ போகும்போது பல தடவை இந்த மாதிரி உரையாடல் நடக்கும்:

நபர் (எங்கள் கண்கள் சந்தித்தபோது – ஒரு சின்ன புன்னகையுடன்): “சார் எந்த ஊரு?”
நான்  (பதிலாக ஒரு சின்ன புன்னகையுடன்): “பெங்களூர். நீங்க எந்த ஊரு?”
நபர்: “நானும் பெங்களூர்தான். பெங்களூர்லே எங்கே இருக்கறது நீங்க?”
நான்: “ஜயநகர். நீங்க?”
நபர்: “நானும்கூட ஜயநகர்தான். எத்தனையாவது பிளாக்?”

இப்படி வளர்ந்த உரையாடல் எங்கேயெல்லாமோ போகும். ஆனால்  நான் மேலே கொடுத்திருக்கும் பகுதியில் எத்தனை பூகோள (அதாவது புவியியல்) அம்சங்கள் அடங்கியிருக்குனு பார்த்தீங்களா ?

முதலாவதாக,  ஊரின் பெயர் (பெங்களூர்). மனிதர்கள் சேர்ந்து வாழும் ஒரு இடம். அதில் சில விதமான கட்டமைப்புகள் இருக்கும் – ஒரு பஞ்சாயத்தோ, நகராட்சியோ (உதாரணத்திற்கு கார்போரேஷன்), சில சட்டங்கள், வீடுகள், ஆஸ்பத்திரி, தெருக்கள், இப்படிபோன்றவை நிறைய இருக்கும். எத்தனை மக்கள் அந்த இடத்தில் குடியிருக்கிறார்கள், எந்த மாதிரியான வசதிகள் இருக்கின்றன, இதையெல்லாம் ஆதரித்து அந்த வசிப்பிடத்தை கிராமம், தாலுக்கா, நகரம், பட்டணம் போன்ற பெயர்களினால் அழைக்கிறோம்.

இந்த உதாரணத்தில் “பெங்களூர்” என்ற உடனையே பல்வேறு விஷயங்களை ஊகித்துக்கொண்டுவிடலாம் – பெரிய ஊர், மாநில தலைநகரம் அங்குள்ள பலவிதமான தொழிலமைப்புகள் … ஆதலால் நானும் அந்த தொழிலமைப்புகளில் சேர்ந்திருக்கலாம். இந்த விதமான விஷயங்கள் ஓர் பக்கம்.

இரண்டாவதாக, செதில்கள் (ஆங்கிலத்தில் “ஸ்கேல்” என்பது). பயங்களுர் மிக பெரிய ஊர். அந்த ஊரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லையென்றால், அந்த செதிலை பற்றி நான்  மேலும் விசாரிக்க மாட்டேன் இல்லையா? ஆனால், தானும் அதே ஊரிலிருப்பதால் அந்த நபர் அந்த செதிலை சிறுதாக்கி “பெங்களூர்லே எங்கே இருக்கறது நீங்க?” என்று கேட்டு மேலும் விசாரித்தார்.

இந்த மாதிரியான உரையாடலை எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம்  காணலாம்.

யாரையாவது முதன் முதலாக சந்தித்தபோது இரண்டாவதோ மூன்றாவதோ கேள்வி இடத்தைப்பற்றிய கேள்வி! பூகோளம் அல்லது புவியியல் கேள்வி.

இதில் ஆச்சரியமேயில்லை. எங்களுடைய அடையாளம் என்பது மிக சிக்கலானது. நான் யாருக்கோ மகன், யாருக்கோ தம்பி, யாருக்கோ சித்தப்பா, யாருக்கோ ஆசிரியன், மற்ற யாருக்கோ மாணவன், பலருக்கு நண்பன், … ஏதோ ஒரு ஊரை சேர்ந்தவன் …

இந்த பட்டியலில் ஊரும் ஒரு முக்கியமான அம்சம். ஏன்?

நாம் பிறந்து, வளர்ந்து, வாழும் ஊர்களின் இலட்சணங்கள் எங்களை எத்தனையோ விதங்களில் உருவாக்குகின்றன. சில நம்பிக்கைகள், நாம் பேசும் மொழி, அதை பேசும் பாணி (ஆங்கிலத்தில் இதை accent, cadence என்றெல்லாம் சொல்லுவதுண்டு) … இப்படி பல விஷயங்கள் உண்டு.

ஆங்கிலத்தில் ஓர் பழமொழியுண்டு: புலியை காட்டிலிருந்து வெளியே எடுத்துவிடலாம் ஆனால் காட்டை  புலியிலிருந்து வெளியே எடுத்துவிட முடியாது (You can take the tiger out of the jungle, but you can’t take the jungle out of the tiger).  அதைப்போலவே என்னை பெங்களூரிலிருந்து வெளியே எடுத்துவிடலாம், ஆனால்  பெங்களூரை என்னுள்ளிருந்து வெளியே எடுக்க முடியாது (You can take me out of Bengaluru, but you can’t take Bengaluru out of me).

இது யாருக்கும் பொருந்தும் பழமொழி. இந்த விஷயம் கணக்கில்லாத கதைகள், நாவல்கள், காவியங்கள், மற்றும் சரித்திரங்களுக்கு முக்கியமான கருப்பொருளாகியுள்ளது .

உங்கள் சொந்த வாழ்விலேயே இதை யோசித்து பாருங்கள். எப்படியெல்லாமோ இதனின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகும். தெரிய தெரிய உங்கள் மனமும் மலரும். பிரர்களுடன் தொடர்புகொள்ளுவதில் மிக உபயோகமாகாவும் இருக்கும். சாந்தி பரவவும் இது மிகவும் பயனுள்ள முறையாகும்.

– டா . சந்திரசேகர பாலசந்திரன்
இயக்குனர், TIGS

Categories:

No responses yet

Share your thoughts

%d bloggers like this: