“நாம் என்ன செய்தாலும், நாம் வாழும் பூமித்தாய், அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, நம்மை எப்படி தாங்கியிருக்கிறாள் பார்! அவளைப் போன்றே நீயும் பொறுமையாக இருக்கப் பழகு” என்று பல பெரியவர்கள் அறிவுரை சொல்வதை நாம் பல வேளைகளில் நிச்சயம் கேட்டிருப்போம். ஆனால், பூமித்தாய் உண்மையிலேயே பொறுமையாக இருக்கிறாளா? என்பது அறிவியல்பூர்வமாக எழக்கூடிய பெரிய கேள்வி! ஏதோ, சாதாரணமாக பார்ப்பதற்கு அமைதியாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால், அதை அமைதி என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.

நீங்கள் வாழும் நிலத்திற்கு கீ‍ழே என்ன நடக்கிறது மற்றும் நாம் வாழும் மேலடுக்கு நிலத்தின் தன்மை உண்மையில் எப்படிப்பட்டது என்பது மட்டும் உங்களுக்குத் தெரிந்தால், அவ்வளவுதான்! ஒரு நிமிடம்கூட யாரும் நிம்மதியாக இருக்கமாட்டீர்கள். என்ன, ஒரே திகிலாக பார்க்கிறீர்கள்! ஆமாம், அதுதான் உண்மை!

நடுங்குதல், குலுங்குதல் மற்றும் சுருட்டுதல் – என்ன? ஏதோ அடுக்குமொழியில் வருகிறதே என்று பார்க்கிறீர்களா! இப்படி அடுக்குமொழியில் சொல்வதற்கேற்ப, பூமியின் அடியில் அடுக்கடுக்காய் ஏதேதோ நடந்துகொண்டிருப்பதை வேறு எப்படி சொல்வதாம்! ஒருவகையில் பூமித்தாய் பொறுமையானவள்தான் என்றாலும், இன்னொரு வகையில் அவள் அப்படியெல்லாம் கிடையாது. நீங்கள் அப்படி புரிந்துகொண்டால் அதற்கு யார் என்ன செய்வது?

நீங்கள் இப்போது இருந்துகொண்டிருக்கிறீர்களே, அதான், அந்தப் புவிமேல்தட்டு…. அந்த மேல்தட்டுக்கள், தங்களுக்குள் ஒன்றுக்கொன்று நழுவிக்கொண்டும், உரசிக்கொண்டும், சறுக்கிக்கொண்டும், ஒன்று மற்றொன்றின் கீழ்ப்புறமாக நகர்ந்தும் இயங்கிக் கொண்டுள்ளன. என்ன இது! சிறுபிள்ளைகள் சேர்ந்து விளையாடுவதைப் போலல்லவா இருக்கிறது இந்த விவரிப்பு! என்று யோசிக்கிறீர்களா? யோசிக்கவே வேண்டாம். அதுதான் உண்மை. சிறுபிள்ளைகள் சேர்ந்து இப்படியெல்லாம் விளையாடும்போது, கீழே விழுந்து காயம்பட்டு, அழுது, சமயங்களில் சண்டையிட்டு – இப்படி பல விரும்பத்தகாத சம்பவங்கள் இயல்பாக நடக்குமல்லவா? அப்படிப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள்தான் பூமியின் இத்தகைய இயக்கத்திலும் நடக்கிறது! என்னப்பா இது, இயற்கையும் இப்படி சிறுபிள்ளைத்தனமான விளையாட்டாக இருக்கிறதே! என்றுகூட நினைக்கத் தோன்றும். இயற்கையின் முறையே அப்படித்தான்!

இப்படியே அந்த தட்டுக்கள் மோதிக்கொண்டு, உரசிக்கொண்டு, ஒன்றையொன்று அமிழ்த்திக்கொண்டு இருந்தால்…ஒரு நாளைக்கு ஏதேனும் ஒரு முடிவு தெரிய வேண்டுமல்லவா … அப்படி நமக்கு அவ்வப்போது தெரியும் முடிவுதான் பூகம்பம் (நில நடுக்கம்). என்ன செய்ய … இயற்கையின் விளையாட்டு, நமக்கோ வினையாக முடிந்து போகிறது!

இப்போது, நாம் எப்போதும் விரும்பாத, ஆனால், தவிர்க்கவே முடியாத அந்த ஆபத்தான பூகம்பங்களின் தன்மைகளை அளவிடும் முறைகள் பற்றி அறிந்து கொள்வோமா?

உத்தராகண்ட்  பூகம்பம் …

அமெரிக்காவிலுள்ள ‘த யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியாலஜிகல் சர்வே’ எனும் அமைப்பு, ஒரு ஊடாடும் வரைபடத்தை (interactive map) பராமரித்து வருகிறது. இந்த வரைபடத்தில், உலகெங்கிலும் நிகழ்ந்த அனைத்து பூகம்பங்கள் குறித்த விபரங்களும் உண்டு. அதை நீங்கள் இங்கேயே காணலாம். (நான் அப்பக்கத்தை, எனது உபயோக வசதிக்காக, ‘பேஸ் பேஜ் (base page)’ அல்லது இன்னும் சுருக்கி வெறும் இரண்டே எழுத்துகளில் BP என்று மாற்றிக் கொண்டேன். அனைத்தும் நம் வசதிக்காகத்தானே!)

USGSஇன் உத்தராகண்ட் நிலநடுக்கத்தின் வரைப்படம். அதன் மேல் கிளிக் செய்து மேலும் விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று, குறிப்பிட்ட இடத்தை ஆய்வுசெய்ய, ஊடாடும் வரைபடத்தை தேர்வுசெய்யுங்கள். அந்த வரைபடத்தில், அவசரமில்லாமல், அங்குமிங்கும் நன்றாக சென்று தேடுங்கள். தேவைப்பட்டால், அளவைப் பெரிதாக்கி (zoom), உங்களுக்குத் தேவையான விபரங்களை அறிந்துகொள்ளுங்கள். சிரமப்பட்டு உத்துப் பார்க்க வேண்டாம். அதொடு, நிலநடுக்கம் தொடர்பான பல்வேறுபட்ட அறிவிக்கைகளையும் (reports) கிளிக் செய்து, ஒவ்வொரு பூகம்பம் குறித்தும் விரிவாக அலசுங்கள். நன்றாக அலசுங்கள் … உங்களுக்குத் திருப்தி ஏற்படும் வரையில் விடவேண்டாம்.

அந்தத் திரையில் பாருங்களேன், மேல்புறத்தில், வலதுபக்க ஓரத்தில், ஒரு அம்புக்குறி கீழ்நோக்கியிருப்பது தெரிகிறதா? பல்வேறு வகைப்பட்ட காட்சிகளுடன்(display), அந்தப் பரிசோதனையை (experiment) கிளிக் செய்யவும்.

 • எது உங்களின் பார்வைக்கு சிறந்த காட்சியாகத் தெரிகிறது? எதனால் அப்படி?
 • அதேசமயம், உங்களின் பார்வையில் மோசமான காட்சி எது? அது ஏன்?
 • மேற்கண்ட கேள்விகள், ஏதோ பொழுது போவதற்கோ அல்லது வெறுமனே கேட்க வேண்டும் என்பதற்காகவோ  கேட்கப்படவில்லை. வரைபடங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து நுட்பமாக சிந்திக்கும் நிலைக்கு நீங்கள் வளர வேண்டும் என்பதற்காகவே அவை கேட்கப்படுகின்றன. ஆம், உங்களையும் ஒரு புவியியல் நிபுணராக மாற்ற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
  சமீபத்தில், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பூகம்பம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து அறிய விரும்பினால், வரைபடத்தில், இந்தியப் பகுதியைப் பெரிதாக்கவும். ஒரு நேரத்தில் ஒரு தடவை மட்டுமே பெரிதாக்கவும். இப்போது, அதிகளவிலான பூகோள விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும்: மையப்புள்ளி (epicentre) மற்றும் அடர் வட்டங்கள் (concentric circles) ஆகியவை, அதிர்வுகளின் அடைவு, மக்கள்தொகை மையங்கள், இடத்தின் தன்மைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நமக்குக் காட்டுகின்றன. இதுபோன்ற பல தகவல்களைக் கொண்டு, பூகம்பம் ஏற்பட்ட இடத்தில், எத்தகைய சேதங்கள் விளைந்திருக்கும் என்பதை உங்களால் எளிதாக கணித்து, ஒரு முடிவுக்கு வரமுடியும்.
  இந்த அடர் மையங்கள் உங்களுக்குக் காட்டுவது என்ன? (குறிப்பு: ஐசோலைன்கள் என்ற கருத்தாக்கம் குறித்து சற்று சிந்தியுங்களேன் – ‍ஐசோலைன்கள் எனப்படும் இந்தக் கோடுகள், சம வெப்பநிலைக் கோடுகள் (isotherms) மற்றும் சம அழுத்த காற்றுள்ள பகுதிகளைக் காட்டும் கோடுகள் (isobars) ஆகியவற்றின் முனைகளை இணைக்கின்றன என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா?
  BP எனப்படும் அடிப்படை பக்கத்தைப் பயன்படுத்தி, பிராந்திய தகவல்தொடர்பு இணைப்பின் மூலம் (Regional Information Link), நிலநடுக்கம் எங்கே பதிவானதோ, அப்பகுதி குறித்த விபரங்களைப் படிக்கவும்.
 • இங்கே, உங்களால் உருவாக்கப்படக்கூடிய பூகோளம் சார்ந்த இணைப்புகள் யாவை?
 • உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சமீபத்திய பூகம்பம் குறித்து, இந்தப் பக்கமானது (page) உங்களுக்கு அளிக்கக்கூடிய முக்கிய பூகோள விபரங்கள் யாவை?
 • பூகம்பம் ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன?

BP -யிலிருந்து, Did you Feel It என்ற இணைப்பை பின்தொடருங்கள். அப்பக்கத்தில், உங்களால் ஒரு தீவிரநிலை (intensity) வரைபடத்தைக் கண்டறிய இயலும். அந்த வரைபடத்தை ஆய்வுசெய்த பின்னர், கீழ்வரும் வினாக்களுக்கு விடைகூறுங்கள் பார்ப்போம்:

 • இது எந்தவகையான வரைபடம்?
 • இந்த வரைபடத்தின் கருதுகோள் (theme) என்ன?
 • இந்த வரைபடம் சொல்ல விரும்பும் தகவல் என்ன?
 • வரைபடங்கள் என்பவை, பொதுவாக தங்களுக்குள் சில குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும். அத்தகையப் பொதுவான அம்சங்களில், நீங்கள் காணும் இந்த வரைபடத்தில் இடம்பெற்றவை எவை? மற்றும் இடம்பெறாதவை எவை?
 • தகவல்களை அளிக்கும் பொருட்டு, வட்டங்களும் வண்ணங்களும் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன? (நட்சத்திரம் மற்றும் பிரகாசமான சிவப்பு நிறம் ஆகியவை மையப்புள்ளியைக் காட்டுகின்றன: இதன்மூலம், அந்த இடத்தில் உட்சபட்ச குலுங்குதல் நிகழ்ந்துள்ளதை நாம் அறியலாம். இப்போது, பிற இடங்களையும், அவற்றின் மக்கள்தொகை அளவையும் ஆய்வு செய்யுங்கள்)
 • பூகம்பம் நிகழ்ந்த இடத்தில் நீங்கள் காணும் இடவியல்பு (topography) என்ன?
 • பக்கத்தின் மேற்பகுதியில் நிலநடுக்கம் குறித்து அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை தகவல்கள் எவை?
 • உங்களுக்கெல்லாம் தெரியும் என நினைக்கிறேன்; இன்றைய நாட்களில், UTC என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமே, பெரும்பாலான சமயங்களில், பூகம்பம் நிகழ்ந்த நேரத்தை அறிகிறார்கள். சரி, நல்லது … இருக்கட்டும். அந்த UTC என்றால் என்ன? மற்றும் அதை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்? பூகம்பம் நிகழ்ந்த நேரத்தை கண்டறிய வேறு எந்த வழிமுறையையும் பயன்படுத்த இயலாதா? அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா?

சோர்ந்துவிடாமல், BP -யிலிருந்து, பேஜருக்கு செல்லும் இணைப்பைத் தொடருங்கள். இங்கே கூறப்படும் ஆட்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து மதிப்பிடுங்கள். ஏன் அந்த சேதம் நிகழ்ந்தது? மற்றும் என்னவிதமான சேதங்கள் அவை?

இறுதியாக, நான் கற்றுக்கொண்டதிலிருந்து ஒன்றை சொல்கிறேன். அதைக் கொஞ்சம் கேளுங்கள். ‘இயற்கைப் பேரிடர்’ என்று நாம் பெயரிட்டு அழைக்கும் வகையில் எதுவும் கிடையாது என்பதுதான் என் கருத்து. எனது இந்தக் கருத்து, பலருக்கும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், சொல்லித்தானே ஆக வேண்டும்? என்னுடைய இந்தக் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடா? ஆம் என்றால் ஏன்? உடன்பாடு இல்லையென்றால், அதற்கான காரணம் என்ன?

இந்தக் கட்டுரையில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான உங்களின் பதில்களை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இதற்காக, பின்வரும் மூன்று வழிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்:

கீழ்வரும் அம்சங்களை சேர்ப்பதற்கு மறாவாதீர்கள்:

 1. உங்களின் பெயர்
 2. படிக்கும் வகுப்பு
 3. பள்ளியின் பெயர்
 4. உங்கள் பள்ளி அமைந்திருக்கும் இடம்

தேர்ந்தெடுக்கப்படும் விடைகளை, அடுத்துவரும் நாட்களில் நான் போடவுள்ள வலைப்பதிவில் (blog post) வெளியிடுவேன். எனவே, உங்கள் பதில்களை 1-11-2018 தேதிக்குள் கிடைத்திடுமாறு செய்யுங்கள் செல்லங்களே!
உங்களுடைய பதில்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வெகுமதி: உங்கள் கணினியில் GoogleEarth குறுஞ்செயலி -க்கு சென்று .kml கோப்பை பதிவிறக்கம் செய்து, அதை குறுஞ்செயலியில் (app) திறக்கவும். அதன்மூலமாக, நான் மேலே குறிப்பிட்ட பக்கங்களை உங்களால் அணுக முடியும்.

குறிப்பு: தலைப்பு படம், யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஜியலாஜிகல் சர்வே (USGS) அவர்களின் உபயம்.

மொழிபெயர்ப்பு – திரு. பிரசன்ன பாரதி, ரிலீஃப் ஃபவுண்டேஷன், சென்னை.

மூல ஆங்கில கட்டுரை  – டா. சந்திரசேகர் பாலசந்திரன், நிறுவனர் மற்றும் இயக்குனர்,
த இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜியோகிராஃபிகல்  ஸ்டடீஸ், பெங்களூரு.

Categories:

No responses yet

Share your thoughts

%d bloggers like this: